!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 5-பகுதி!!
இடையாறில் இருந்து திரு கோவிலூர் செல்லும் வழிகள் மோசமாய் இருக்கிறது. இரு சக்கர வாகனத்தின் கியரை மாற்றி மாற்றி உபயோக படுத்தியதால், கைகள் தளர்கின்றன. எப்படியோ திருக்கோவிலூர் அடைந்தேன். தமிழ் மன்னர்களின் சரித்திரம் பேசும்போது , இந்த ஊர் கண்டிப்பாக குறிப்பிடபடும்.
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம். அந்தகாசூரனை சிவபெருமான் வதம் செய்த திருத்தலம். வாஸ்து பிறந்தது இத்தலத்தில் என்கிறார்கள். சுக்கிரன் சாபம் நீங்க பெற்ற தலம். கோவில் உள்ளே நுழைந்தால், வீடு கட்ட செங்கற்களை வைத்து யாகம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்தகம் என்றால் இருள், அதை அழித்தவன் இந்த ஈசன் என்று அர்ச்சகர் கோவில் வரலாறு சொல்கிறார். இருளை அழித்தவன் இவன் என்று அங்கே இருக்கும் விளக்குகள் வழி சொல்கிறது. இருளாய் கிடக்கும் மனம் , ஆடும்நாதனை காண்கையில் கதிரவனாய் மலர்கிறது. தாயார் தனியாக கோவில் கொண்டு உள்ளார். கலைகளின் அரசி களையாக உள்ளாள்.
விடைபெற்று, அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் போகும் வழியில், கபிலர் குன்று வருகிறது. பாரியின் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோயிலூர் ஆண்ட தெய்வீக மன்னனுக்கு அவ்வையார், கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்த பின்பு, பாரியின் மறைவு தாங்கமால் கபிலர் உயிர் நீத்த இடம் இது.
நட்பின் நினைவு சின்னம். பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது. ஒருவர் மட்டும் மேலே ஏறும் அமைப்பு உள்ள கோவில். சிறிய லிங்கம் உள்ளே வைத்து இருக்கிறார்கள்.
அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் விழுப்புரம், பிற சமயதவாரால், கோவில் அடைக்கப்பட்டு இருக்க, சம்பந்தரால் மீட்கப்பட்ட தலம். விஸ்ணு மகாபலியை கொன்ற பாவத்தை ஈசன் நீக்கிய தலம்.
அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் விழுப்புரம், பிற சமயதவாரால், கோவில் அடைக்கப்பட்டு இருக்க, சம்பந்தரால் மீட்கப்பட்ட தலம். விஸ்ணு மகாபலியை கொன்ற பாவத்தை ஈசன் நீக்கிய தலம்.
திருஞானசம்பந்தர் இங்கு வந்து ஈசனை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல முயற்சித்து முடியாமல் போனதால், இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார்.
சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். அழகான கோவில்.சுற்றி அகழி போல் உள்ளது. சிறு குன்றின் மேல் உள்ளது. நான் சென்ற பொது கருவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது.
இரும்பு கதவின் ஊடே ஈசன் தெரிகின்றான். கருவறை முன் மண்டபத்தில் அமைந்தால், சுகமாய் காற்று தழுவுகிறது. நிதியுதவி தேவைப்படும் கோவில். கோவில் கூட்டும் பெண்மணியிடம் பேசினால், சம்பளம் எதுவும் பெரிதாக இல்லை. ஆனால், சாமியை எப்படி இப்படியே விடுவது. அர்ச்சகர் கோவிலை பிரபல படுத்த முயன்று கொண்டு இருக்கிறார்.
நான் முடிந்த வரை கோவில் சுத்தபடுத்த முயல்கின்றேன் என்றார். கோவில் உண்மையில் தூயமையாக உள்ளது. குழந்தைகள் உள்ள தாய், ஈசனையும் குழந்தையாக கருதுகிறார். இவர்கள் தான் உண்மையில் ஹிந்து மதத்தின் சொத்து.இவருக்கு நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் கருவறை மண்டபம் வந்தேன்.
அர்ச்சகர் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். உள் பிரகாரம் சுற்றி வந்தேன், கிட்டத்தட்ட முப்பது முறை சுற்றி வந்தேன். இரண்டரை மணி நேரம் யாரும் வர வில்லை. தூக்கம் கண்ணை கட்டி கொண்டு வந்தது. திருவண்ணாமலை போகும் முன் ரமணர் இங்கே வந்து வழிபட்டார்.
கண் மூடி அமர்ந்த அவரின் உருவ சிலை அருகே போய் அமர்ந்தேன். எது ரமணரை இழுத்தது, திருவண்ணாமலைக்கு. வீடு விட்டு கோவில் பார்க்க வந்தாலும், மீண்டும் வீட்டிற்கு திரும்ப செல்லும் நினைப்பு நம்மை செலுத்தி கொண்டு இருக்கிறது. என்ன செய்தால் எல்லாவற்றையும் உதறும் அந்த தைரியம் எனக்கு வரும் என்ற தெரியவில்லை.
கோவில் கோவில் போனாலும் ஈசனை முழுதும் அறிய முடியவில்லை இன்னும் என்னால்.. ஈசனை எப்படி அறிந்து கொள்வது என் சொல்லி கொடுங்கள் ரமணரே என்ற வேண்டிக்கொண்டு இருக்கும்போதே உறங்கி போனேன். ரமணரை நினைத்து கொண்டு இருந்தால், கனவில் சம்பந்தர் வருகிறார். ஏதோ ஏதோ கோவிலுக்குள் செய்து கொண்டு இருப்பதாக கனவிற்குள் வருகிறது.
ஈசன் கல்லாய் நிற்க, தாயார் transformer படம் போல் உயிர் பெற்று குழுந்தை சம்பந்தருடன் கோவில் சுற்றி விளையாடுவது போல கனவு போய் கொண்டு இருக்க, தலை மேல் ஒரு அடி பலமாக விழுந்த உணர்வு பெற்று, கண் விழித்தால், குழந்தை ஒன்று என் தலையில் தட்டி கொண்டு இருந்தது.
மீண்டும் தட்ட முயல , அந்த குழந்தையின் தாய் பிடித்து கொண்டாள். கோவில் பார்க்க வந்த தம்பதி போலும். சரியான சுட்டி குழந்தை அது. ரமணர் சிலையை போய் கட்டி கொள்வதும், ஒரே கொண்டாட்டம் தான் அதற்கு. அவர்கள் போன சிறிது நேரம் கழித்து அர்ச்சகர் வந்தார்.
கருவறை திறந்தார். என் காவலனை காட்டினார். “தடுமாறும் புத்தி, கோவில் கதவு தாண்டியதும், பள்ளத்தில் விழுகிறது, அதை தடுக்கும் வழி தெரியவில்லை எனக்கு, பஞ்ச பூதங்களை ஆள்பவனே, என் ஐம்புலன்களையும் அடக்கி ஆள எனக்கு சொல்லி தருவாயா என்ற வேண்டுதல் விடுத்தேன்
பதில் சொல்லாமல், பூக்கள் கொண்டு ஈசன் நமக்கு புன்னகை செய்ய, நம் மனமோ ஈசன் முன் உயிரோடு புதைகின்றது. சிரமப்பட்டு வெளி வந்து , கோவில் சுற்றி விடை பெற்றேன்.