Wednesday, October 26, 2016

ஒரு கூர்வாளின் நிழலில்-என்ன நடந்தது ஈழத்தின் இறுதி யுத்தத்தில்

வெகு நாளாக தேடி கொண்டு இருந்த புத்தகத்தை தந்தை வாங்கி வைத்து இருந்தார். ஊருக்கு போன போது கொடுத்தார், பாவமாய் இருக்கிறது என்றார். “ஒருகூர்வாளின்நிழலில் “. ஈழ விடுதலை போர் ஏன் விரயமானது என்ற வினா எல்லாரிடமும் இறைந்து கிடக்கிறது. விடை தருபவர் எல்லாம் ஈழத்தில் விதையாகி போனதால் , வினா மட்டும் ஈழத்தின் வீதிகளில் விரக்தியாக உலவி கொண்டு இருக்கிறது.

முள்ளிவாய்கால்களில் முறிந்த விழுந்த தமிழ் இனத்துடன் முற்று பெறாமலே முடங்கி நிற்கிறது அந்த கேள்வி "என்ன நடந்தது இறுதி யுத்தத்தில் "
புலிகளின் மகளிரணி தலைவிக்கு கூட அது புதிராக தான் இருந்து இருக்கிறது என்பதை புத்தகத்தை படித்தால் புரிகிறது.புலிகளின் வெற்றி பற்றி பேசி கொண்டே போய் புலிகளின் தோல்வியில் புத்தகம் முடிகிறது.
“ஏன் அக்கா, உலகம் எங்கோ போய் கொண்டு இருக்க , நாம் மட்டும் காட்டின் சேற்று சகதியில் அலைந்து கொண்டு இருக்கின்றோம்” என்ற பெண் புலிகளின் ஆதங்கம் பற்றி பேசுகிறது.

யுத்தத்தின் மூலம் தேசத்தை வென்று எடுத்தால் , தப்பி போன பிள்ளைகளின் அடுத்த தலைமுறைகள் திரும்பி வந்து தேசத்தை கட்டி எழுப்பி விடும் என்று நம்பிக்கையில், தமிழ் தேசத்தின் வேர்களை ஊன்ற , தன்னையே மண்ணாகி மடியும் பிள்ளைகளை பற்றி விவரிக்கும் போது, அடுத்த பக்கத்தை புரட்ட முடியாமல் விரல்கள் விறைத்து போகிறது.

"கல்வியை விட்டு, நீங்கள் களத்தில் போராடி , உங்கள் கை இழந்து , கால் இழந்து , நீங்கள் வென்று எடுக்கும் தேசத்தில் , வேறு தேசம் நோக்கி போன பிள்ளைகள் கல்வி பெற்று மருத்தவராகவோ அல்லது இன்ஜினியரகவோ வந்து நிற்கும் போது, அவர்களுக்கு ஏவல் வேலை செய்பவராக தான் நீங்கள் இருக்க முடியும்" என்று ஒரு பெண் புலியின் தந்தையின் கோபத்தை புத்தகம் பதிவு செய்து இருக்கிறது.

இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களிலும் அண்ணே ஒரு வழி வைத்து இருப்பார் என்று பிள்ளைகள் நம்பி இருக்க, புலி தலைவர் தன் வெறும் கையை விரித்து காண்பித்த போது , இது தான் விதி என்று களத்தில் வீழ்ந்து போய் இருக்கின்றன பிள்ளைகள்.

எந்த தலைவரின் அதிரடி முடிவுகளால் , தமிழ் இனம் காக்க பட்டதோ , அதே தலைவரின் அதிரடி முடிவுகளால் தமிழ் இனம் கால சக்கரத்தில் இருந்து கழிக்கப்பட்டு இருக்கிறது என்று புத்தகம் சொல்கிறது. எனக்கு ஏற்க மனம் இல்லை, அதே நேரத்தில் மறுக்கவும் மனம் இல்லை.

ராஜீவ்காந்தி கொலை மற்றும் மற்ற மற்ற தமிழ் குழுக்களின் மீதான புலிகளின் தாக்குதல்களை தவிர்த்து பார்த்தால் , புலி தலைவர் தான் ஈழ மக்களின் நம்பிக்கையாக இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. முப்படைகள் வைத்து ஒரு தமிழ் தேசத்தை கட்ட முயன்று, முடிந்து போய் இருக்கிறார்.

புத்தகத்தின் எந்த இடத்திலும் இலங்கை ராணுவத்தை பற்றி தமிழனி சாடல் செய்யாமல் இருப்பது கொஞ்சம் நெருட தான் செய்கிறது. புத்தகம் சில இடங்களில் ஊமையாகி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். சில நிகழ்வுகள் இங்கே பேச பட வில்லை.

பெண்ணாக வாழ்வதே ஒரு பெண்ணிற்கு போராட்டம் என்று சுழலில் , ஆயுதம் ஏந்தி போராடிய பெண்களின் வாழ்வு அசாத்தியமானது. யுத்தம் உயிரை ஒரு நொடியில் உறிஞ்சி விடும். சரணடைந்த பெண்ணின் உயிரை மட்டும் அல்ல உடலையும் தினம் தினம் உறிஞ்சி தின்னும் அதிகார மையத்தின் அட்டை பூச்சிகளில் இருந்து மீளவது , மறு ஜென்மத்திற்கு ஒப்பானது.

ஆதலால் தோற்று போய். சரணடைந்து, மீள் வாழ்வு பெற்று , மீண்டும் வாழ முயன்று மீண்டும் தோற்று எழாமலே போன ஒரு போராளி பெண்ணின் புத்தகத்திற்கு உள் நோக்கம் கற்பிக்க என்னால் முடிய வில்லை.
முள்ளிவாய்க்காலில் தப்பி பிழைத்த பெண் பிள்ளையை , புற்று நோய் தேடி பிடித்து புதைத்தே இருக்கிறது.

ஆனால் புத்தகம் தமிழனியை உயிர்ப்பித்து வைத்து இருக்கிறது.

கூர்வாளின் நிழலில்" இருந்து வெளியாகும் வார்த்தைகள் நம் இதயத்தை இரு கூறாக பிளந்து இருக்கிறது.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...