இரவு 9 மணியை நெருங்கியது. இந்த முறை கோவிலில் இரவு படுத்து உறங்கும் திட்டம் இல்லை. சென்ற முறை கோவிலில் இரவு படுத்து உறங்கியதற்கு, தந்தையிடம் இருந்து கடும் எதிர்ப்பு. பாதுகாப்பு பற்றிய அவரின் கவலை புரிந்து கொள்ள கூடிய ஒன்று. தங்கும் விடுதியை திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில் அருகே தேடிக்கொள்ளும் எண்ணத்துடன் கோவில் இருக்கும் தெருவில் போனால் , கோவில் திறந்து இருந்தது.
உற்சாகமாக உள்ளே சென்றேன். சற்றே பெரிய கோவில்.லட்சுமியின் கடாஷம் ஆலயத்தை அரவணைத்து உள்ளது. அப்பரை கல்லுடன் கட்டி கடலில் எறிய, ஈசன் புகழ் பாடி கல்லை கட்டு மரமாக மாற்றி கரை ஏறிய அப்பர், இந்த திருகோவிலில் தான் முதலில் நுழைந்து பதிகம் பாடினார்.
முல்லைவன நாதனை (ஈசன்) கண்டால் மூச்சே நின்று போகிறது. தாமரை மாலை சூடி நம்மை தவிக்க விடுகின்றான். அர்ச்சகர் பார்த்தவர் நகர்ந்து போகலாம் என்று சொன்னாலும், கால்கள் நகர மறுக்கின்றன. அழகிற் சோதியான் அம்பலத்தில் ஆடுவான் என்ற பாடல் மனதின் உள்ளே ஒலிக்கிறது. உள்ளே நுழைபவர்கள் உருத்திரனின் உருவழகை கண்டு உறைந்து போகிறார்கள் என்பதை அவர்கள் விழித்திரையின் விரிவே வியப்பாய் நமக்கு சொல்கிறது.
திருக்கோவில் சுற்றி வர பேரானந்தம். பிறைச்சென்னியன் (ஈசன்) ஆலயம் பொலிவுடன் உள்ளது. சிவன் சித்தராக வந்து விளையாடிய குளம் கண்டேன்.
வெளியே வந்து , தங்கும் விடுதி எடுத்து, நன்கு உறங்கினேன். காலை எழுந்து ஆயுத்தமாகி, திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் நோக்கி விரைந்தேன்.
ஆலயம் செல்லும் வழியில் ஓலையாறு என்ற ஆறு வருகிறது. நளினமாய் வளைந்து வளைந்து போகிறது ஆறு. திரைப்படங்களில் வரும் அழகான கிராமம் போல் இருக்கிறது. கிராமமே இப்படி என்றால், கோவில் எப்படி இருக்கும் என்ற ஆசையில் போனால், ஆலயத்தை கண்டவுடன், சுக்கல் சுக்கலாக மனம் சிதறுகிறது. ஈசனை சுமந்து சுற்றும் தேர் சிதிலமாகி ஆலயம் முன் அனாதையாக உள்ளது. கோவில் அடைக்கப்பட்டு இருந்தது. ஏழு மணி ஆனாலும் திறக்கும் அறிகுறி இல்லை. விசாரித்து கோவில் மணியக்காரர் வீடு கண்டுபிடித்து ஆலயம் திறக்க வேண்டினேன்.
சரஜோ என்ற அம்மையார் வந்து கோவில் திறந்தார். பிரமாண்டமான கோவில் , மயான அமைதியுடன் உள்ளது. பூஜைகள் மிக மிக சிறிய அளவில் தான் நடைபெறுகின்றன என்பதை கோவில் சொல்கிறது. எவன் எக்காலத்திலும் அழியாதவனோ அவன் கோவில் அழிவை நோக்கி உள்ளது.
கடல் சீற்றத்தில் புதையுண்ட கோவில், சிவ பக்தர் ஒருவரால் மீட்கபட்டு , புன நிர்மாணம் பெற்று , பின் இன்று மீண்டும் அழிவை நோக்கி உள்ளது.
அகத்தியர் செய்த மணல் லிங்கம். நீர்ச்சடையன் (ஈசன்), நம் நினைவை எல்லாம் நிறுத்துகின்றான். தீப ஆராதனை காட்டி அம்மையார் பிரசாதம் கொடுத்தார். நன்றி சொல்லிவிட்டு கோவில் சுற்றி சுற்றி வர வர அழுகை வந்தது. கோவில் சுவர் எல்லாம் கிறுக்கி வைத்திருந்தது ஒரு கீழ்த்தரமான கூட்டம்.
சம்பந்தராலும், அகத்தியராலும் கொள்ளப்பட்ட கோவில் மக்கி கொண்டு இருக்கிறது. "இதற்கு நீ மண்ணுக்கு உள்ளே புதைந்து போய் இருந்து இருக்கலாம். பூமித்தாய் உன்னை பூவாய் பாதுகாத்து இருப்பாள், எங்கள் மனிதர்களுடன் வாழ ஏன் முற்பட்டாய் என் ஈசனே" என்று புலம்பி விட்டு , என்னால் ஆன நிதியுதவியை கோவிலுக்கு அளித்து விட்டு அடுத்து கோவில் நோக்கி பயணித்தேன்.
குறிப்பு: மங்களபுரீஸ்வரர் கோவிலில் எடுத்த 7 புகைப்படங்களை இணைத்து உள்ளேன். சுருக்கமாய் எழத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கோவில் நிலைமை பற்றி விரிவாக சொல்ல வேண்டும் என்பதால் இரண்டு கோவிலே பதிவை முழுதும் எடுத்து கொண்டது