Wednesday, October 8, 2014

274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 2-வது சுற்றின் 1-பகுதி

மீண்டும் ஓர் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு ஒரு இரண்டரை நாட்களுக்கான இரு சக்கர வாகன பயணத்திட்டம். இந்த முறை சென்னையில்இருந்து பாண்டிசேரி ஆரம்பித்து சிதம்பரம், சீர்காழி , கடலூர் வழியாக காரைக்கால் தொட்டு , மீண்டும் விருத்தாச்சலம் வழியாக , சென்னையை அடைய வேண்டும் என்பது திட்டம்.
திட்டம் நமதாக இருந்தாலும் , அதை தீர்ப்பது ஈசன் கையில்.
வெள்ளிக்கிழமை மதியம் சென்னை திருவான்மியூர் மருந்திஸ்வரை வணங்கி விட்டு இரு சக்கர வாகனத்தை திண்டிவனம் வழியே திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி நோக்கி செலுத்தினேன்.
சென்னையில் இருந்து 169 KM தொலைவில் அமைந்த ஆலயம். நான் சென்ற போது, நடை அடைக்கப்பட்டு இருந்தது. வெயிலில் பயணித்த காரணத்தால் மிக தளர்ச்சியாக இருந்தால், கோவில் வாசலில் அமர்ந்து உடன் களைப்பு மிகுதியால் அயர்ந்து விட்டேன்.
சற்று நேரத்தில் மாடு வந்து எனது டிராவல் பையை முகர்ந்த அதிர்ச்சியில் விழிப்பு வந்தது. கோவில் நடை திறந்து இருந்தது. முகத்தை கழுவி விட்டு, கோவில் உள்ளே நுழைந்தேன். ஈசன் பிரம்மாவின் தலையை கிள்ளி எறிந்து ஆணவத்தை அழித்த இடம். அழகான கோவில். நான் ,ஈசன், அர்ச்சகர் தவிர யாரும் இல்லை. ஆண்டவனை காட்டி விட்டு அர்ச்சகர் வெளியேற , நான் மட்டும் ஈசன் அருகே. என்ன கொடுப்பினை என்று மெல்ல ஆணவம் தலையில் ஏற, சட்டென்று மீண்டும் வந்த அர்ச்சக்கர் கணிரென்று சொன்னார், ஆணவம் அழிய வேண்டி கொள்ளுங்கள் என்று.
முதல் கோவிலே நடு தலையில் நச்சென்று கொட்டியது. கேட்க எதுவும், தோணாமல், மனம் குளிர மகேசனை பருகிவிட்டு மெல்ல கருவறை விட்டு வெளியேறினேன். கோவில் நல்ல பராமரிப்பில் உள்ளது.
'திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்-. இந்த கோவிலுக்கு செல்லும் போது, மாலை மங்க தொடங்கி விட்டது. ஒரளவு நல்ல சாலைகள், ஆனால் தெருவிளக்கு எதுவும் எரிய வில்லை. பயணம் மிக கடினமானது. தட்டு தடுமாறி கோவிலை சென்று அடைந்தால், மின்சாரம் இல்லை கோவிலில். குறைவான கூட்டம். ஈசனை தோழராக பெற்ற சுந்தரர், இந்த தலத்திற்கு வரும் போது, ஈசன் இங்கே குருவாக அமர்ந்து தோழருக்கு தவநெறி பாதையை காட்டுகிறார்.
மின்சாரம் இல்லாமல் போனாலும், லிங்க திருமேனி அகல் விளக்கால், கண்ணுக்கு அமுது ஊட்டுகிறது. சுந்தரர்க்கு வந்திரே, இந்த சுகந்தனுக்கு வர மாட்டீரோ என்று மனம் சிறை பட்ட பறவை போல் சிறகடித்து படபடக்கிறது. குரு என்று வர நான் நல்ல சீடனா என்ற கேள்வி எழும்பி, நான் செய்த பாவத்தின் பக்கங்களை எனக்கே படித்து காட்டுகிறது.
சுய பச்சாதபம் கொண்ட மனம், ஈசனின் முன் நிக்க நாணி, கோவிலை சுற்ற சொல்லி உடலை நகர்த்துகிறது. சுற்றி வந்தால் கோவிலின் நிலைமை மிக மோசம் இல்லை. பூஜைகள் சரியாக தான் நடைபெறுகின்றன. விமர்சையாக இல்லை என்றாலும், ஒரு நிம்மதி வருகிறது.
'திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கடலூர். ஈசனின் வீர செயல்கள் நடைபெற்ற அட்ட வீரட்டானத் தலங்களில் இதுவும் ஒன்று. ராஜராஜ சோழன் வந்த கோவில். இதை பார்த்து தான் தஞ்சை கோவிலை கட்டியதாக கோவில் குறிப்பு சொல்கிறது. இறை ஒரு புன்சிரிப்பில் , திரிபுரசுந்தர அசுரர்களை எரித்த இடம். தியானத்தில் அமர்ந்த ஈசனே அழகின் உச்சம். புன் முறுவல் பூத்த புவனநாதன் (ஈசன்) பூரிப்பாய் நிற்கின்றான். பெரிய கோவில். குறை ஒன்றும் இல்லை கோவிலுக்கு.
'திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்-கடலூர். சிதம்பரம் செல்லும் சாலையில் சற்று உள் ஒடுங்கி உள்ளது. இங்கும் மின்சாரம் இல்லை. இங்கே கருவறையே பள்ளியறையாக உள்ளதால், இரண்டு வினாடிகள் மட்டுமே தரிசினம். பிரதமரே வந்தாலும் இரண்டு வினாடிகள் தான். ஆலவாய் அண்ணல் (ஈசன்) அம்மையுடன் இணைந்தே உள்ளான். வினாடிக்கு குறைவான நேரம் என்றாலும் , விளக்கின் ஒளியில் ஈசன் விழியோடு இழைகின்றான்.
அருள் சூழ்ந்து வலம் வரும் நேரம், இருள் சூழ்ந்து கோவில் இருக்கிறது. ஈசனை நினைத்து கொண்டு பிரகாரம் சுற்றி வந்தேன். மங்கலான நிலையிலும் கோவில் நிதி இல்லாமல் இருக்கிறது என்பது புரிகிறது. திருமால் எப்போதும் ஈசனை இங்கே தியானித்து கொண்டு இருக்கிறார். இறையின் அருகே எப்பொதும் அமரும் தருணம் நமக்கு எப்போது வாய்க்குமோ என்ற கலக்கத்துடனே , சிதம்பரம் நோக்கி இரவை கழிக்க வாகனத்தை செலுத்தினேன்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...