ஈசன் மும்முகத்தில் காட்சி அளிப்பது இங்கே மட்டுமே. அலங்கார பிரியன் அரசனின் தோரணையில் அமர்ந்து இருக்கின்றான். சூரியன் கண்டு மலரும் தாமரை போல், ஈசனை பருகி, தீபங்கள் மலர்ந்து மிளிர்கின்றன. நல்ல நிலையில் உள்ள கோவில். குண்டலினி சித்தரின் ஜீவ சமாதி ஈசனை ஒட்டி உள்ளது. நீங்கள் அறிந்த ஈசனை எனக்கு அறிவிக்க மாட்டிர்களா சித்தரே , என்று அவரிடம் வேண்டி கொண்டு வெளியே வந்தேன்.
அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். தட்சனின் யாகத்திற்கு சென்று ஈசனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பாவம் நீங்க வந்து வழிபட்டு மீண்டும் உருவம் பெற்ற தலம். என் பாவ கணக்கு ஒரு கோவிலுடன் முடிய கூடிய விஷயம் அன்று என்று எனக்கு தெரியும். சுமாரான நிலையில் உள்ள கோவில். யாரும் இல்லை கோவிலில். வழக்கம் போல் ஈசன் தனித்து நிற்கின்றான். காலத்தின் கணக்கு நாம் கண் முன்னே நிற்கிறது.
என்ன வேண்டுவது என்று தெரிய வில்லை. பேரின்பம் என் கண் முன்னே நிற்கும்போது , வேறு எதை கேட்பது ஈசனிடம். ஈசா என்ற வார்த்தை மட்டும் உள்ளே உலவி கொண்டு இருக்க, மௌனமாய் கோவில் விட்டு வெளியேறினேன்.
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். பசுக்கள் , கொம்பு வேண்டி ஈசனை வழிபட்ட தலம் மற்றும் ராமர் வழிபட்ட தலம். இரவு ஏழு மணியளவில் கோவிலை அடைந்தேன். பெரிய கோவில். அனல்விழியனை (ஈசன்) கண்டால் மனம் ஆடி போகிறது. கோவில் வரலாறு சொல்லி அர்ச்சகர் நகர்ந்து போகிறார்.
மீண்டும் ஒரு தனிமை தவம் ஈசனுடன். வேண்ட நினைத்தாலும் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வேண்டுதல் நின்று போய் விட்டது என்று புரிகிறது. வில்வ மாலை அணிந்தவன் , நம்மை வில் எய்தாமலே வீழ்த்துகின்றான். தாயை தேடினால் , தாய் கோவிலில் இல்லை. கலவரமாகி , அர்ச்சகரிடம் கேட்டால், பிருகு முனிவர் ஈசனை மட்டும் வணங்கியதால் , அம்மை கோபித்து கொண்டு எதிரே தனி கோவில் கொண்டு உள்ளாள் என்றார்.
வெளிவந்து பார்த்தால், தனி கோபுரம் கொண்டு, தனி கோவிலில் நிற்கின்றாள் அம்மை. எப்படி கவனிக்காமல் விட்டோம் என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தால், நிலவு இறங்கி வந்து கோவிலில் நிற்பது போன்று ஒரு குளுமை கோவிலுக்குள். ஈசனிடம் இருந்து சந்திரன் இடம் மாறி தாயிடம் நிற்கின்றான் போலும், அன்பு இங்கே அபிராமியாக நம்மை அள்ளுகிறது.
இரவு 8 மணியை நெருங்க, இனிமேல் மற்ற கோவில்கள் திறந்து இருக்க வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் கொண்டு , திருவெண்ணெய் நல்லூரில் தங்கும் விடுதி தேடி கொள்ளலாம் என்று பயணித்தேன்.
வழியில் கிரமாம் என்று ஊரை தாண்டும் போது, நாய் ஒன்று வேகமாக குறுக்கே ஓடியது. தடுமாறி போய், கீழே விழ வேண்டிய நிலையை சமாளித்து , வண்டியை ஓரத்தில் நிறுத்தினேன்.
வண்டியை நிறுத்திய இடத்தில் இடபக்க சந்தில் ஒரு கோவில் கோபுரம் தென்பட்டது. என்ன கோவில் என்ற யோசனையுடன் சென்றால் , அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் என்ற பலகையை கண்டவுடன் தூக்கி வாரி போட்டது எனக்கு. என் பயண திட்டத்தில் பார்க்க வேண்டிய பாடல் பெற்ற தலம் இது.
உண்மையில் அபிராமேஸ்வரர் திருக்கோயில் பார்த்து முடித்த உடன், இடையாறு அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், பின்பு திருவெண்ணெய் நல்லூர், பின்பு அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் என்பது என் பயண திட்டம். எப்படி பயண திட்டத்தை மாற்றிக் கொண்டேன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
கோவில் நடை திறந்து இருந்தது , இரவு 8.45 மணி. வெளி ஊரில் இருந்து வந்த பக்தர்கள் திருவெண்ணெய் நல்லூர் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள், அவர்கள் வந்து பூஜை செய்வதற்கு வசதியாக கோவில் நடை அடைக்காமல் உள்ளோம், இல்லை 7.30இல் இருந்து 8 மணிக்குள் கோவில் அடைத்து விடுவோம் என்று கோவில் துப்பரவாளர் சொன்னார்.
உற்சாகமாக உள்ளே சென்றேன். ஈசனின் வாயில்காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம், அதிசய மலரை பறிக்க நினைத்த மன்னன், ஈசன் மீது அம்பு விட்ட தலம். என் ஈசனின் கருணை, பல கோவில்களில் கருவறை முன் தனியாக நிற்கும் பேறு கிடைத்து கொண்டு வருகிறது எனக்கு.
அழுகை தானாக வருகிறது ஈசனை கண்ட உடன். சித்தர்களும், யோகிகளும் , ஏன் ஈசனையே நாடுகின்றனர் என்பது ஈசன் முன் நிற்கும்போது உணர்த்தபடுகின்றது நமக்கு. கருவறையில் பிறந்த நாம், இன்னோர் கருவறை முன் வந்து நிற்கின்றோம். இங்கே தாயுக்கும், தாயுமானவன் கருவறையில் நிற்கின்றான். கருவறை நமக்கு இன்னோர் தாயின் வீடாக அறிவிக்க படுகிறது.
கவலைகள் நம்மிடம் இருந்து கழற்றி எறியப்படுகிறது. பாதுகாப்பு என்ற சொல்லின் அர்த்தம் இங்கே பலமாக நம்மால் உணரப்படுகிறது. கோவில் சுற்றி வெளியே வந்தால், நம் பைக்கின் முன் குறுக்கே பாய்ந்த, நாயார் நிற்கிறார் வாலை ஆட்டிக்கொண்டு. நன்றி சொல்லிவிட்டு , திருவெண்ணெய் நல்லூர் கோவில் நோக்கி பறந்தேன்.
நான் சென்ற போது, திருவெண்ணெய் நல்லூர் கோவில், நடை அடைக்கப்பட்டு இருந்தது. அங்கு தங்கும் விடுதி எதுவும் இல்லை. திருக்கோவிலூர் செல்லலாம் என்று நினைத்தால் , மிக மோசமான சாலைகள் , இரவில் பயணிப்பது சரியான செயல் அன்று என்று அங்குள்ளவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
சில அன்பர்கள் தங்கள் வீட்டில் தங்கும் படி ஆதரவு காட்டினார்கள். நன்றி சொல்லி விட்டு, வேறு வழி இல்லாமல், மீண்டும் விழுப்புரம் வந்து ,விடுதி எடுத்து நன்றாக அயர்ந்தேன்.