Wednesday, August 31, 2016

என்னை வெல்லுதல் எப்போதும் நிகழ போவதில்லை

!வாழ்வில் எது கடினம்!!

கற்பதே கடினம் கடினம் என்று கதற வைத்த கல்வி கூடங்களின் கல்வி என்னால் வென்று எடுக்கப்பட்டது.

கற்பாறை கூட பெயர்த்து விடலாம் , கன்னியரின் காதலை வெல்ல முடியாது கருத்துக்களில் களைத்து கிடந்தாலும், மெல்ல காதல் என்னால் வென்று எடுக்கப்பட்டது.

நண்பர்கள் அற்ற வாழ்க்கை நரம்புகள் அறுந்த வீணை என்று நடுங்கி நடந்த காலத்தில் , நட்பு என்னால் வென்று எடுக்கபட்டது.

சுற்றத்தார் சுற்றி இருக்கும் சூழலே , சுவையானது என்று அறி்யபட்டாலும் , சச்சரவுகள் வந்து என் சட்டையை பிடித்தன , இருந்தாலும் சுற்றம் என்னால் வெல்லபட்டது.

எது எல்லாம் வெல்லவே முடியாது என்று வாழ்க்கையின் ஒவ்வொரு இடத்திலும் சொல்ல பட்டதோ அங்கே எல்லாம் வென்று இருக்கின்றேன் என்னை பொறுத்தவரை.

எல்லாம் “ என்னால் என்னால் “ என்று என்னை நானே ஏமாற்றி கொண்டு திரிந்தேன்.

இறையை பற்றிய இயக்கம் உந்தி தள்ள , இறை முன் போய் நிற்கும் போது மிச்சம் சொச்சம் எதுவும் இன்றி இறை நம்மை வெல்கிறது

இறையை ஒரு போதும் வெல்ல முடியாது என்று புரிந்த போது, இறை நம்மை வென்று இருக்கிறது. இறையை வென்று எடுக்க என்னை நான் வெல்ல வேண்டும். அதற்கான சாத்திய கூறு என் சரித்தரத்தில் சத்தியமாக இல்லை.

கோவிலின் கருவறைக்குள் கால் வைத்த கணமே என் தோல்வி உறுதியாகிறது .உள்ளே உக்காந்து இருப்பது இரக்கமே இல்லாமல் உடனே கொல்கிறது என்னை. உள்ளத்தை மொத்தமாக உறிஞ்சி விட்டு, நம்மை உதறி தள்ளுகிறது. கல்வியும், காதலும், காமமும், நட்பும், சுற்றமும் கண்டதுண்டமாக வெட்டி எறியபடுகிறது.

கருவறை கடந்து வெளிவரும்போது சவமாக தான் வருகின்றோம், ஒவ்வோர் முறையும். முதலில் இருந்து மீண்டும் எல்லாம் தொடங்க வேண்டும் , ஆனால் ஒவ்வோர் முறை இறை முன் போகும் போது, மொத்தமாக இறை முடித்து விடுகிறது. மீண்டும் முதலில் இருந்து

இந்த கால சக்கரத்தில் ஒவ்வொரு முறையும் சுழல வேண்டும். என்னை நான் வென்றால் இது நிற்கும். என்னை வெல்ல என் நினைவுகளை நிலை நிறுத்த வேண்டும். ஒரு இடத்தில் குவிக்க வேண்டும்.

என் ஜந்து புலன்களும் என் கட்டளையை ஏற்பதில்லை. கண்டபடி குதித்து ஓடும் மன குதிரையை கட்டுபடுத்த ஈசனை அழைத்தால் , ஈசன் மனகுதிரையை ஒட்டி கொண்டு போய் விடுகின்றான். மனம் ஒன்று இருந்தால் தானே அதை வெல்ல முடியும். என்னிடம் இல்லாத ஒன்றை எவ்வாறு நான் வெல்வது.

ஆக என்னை வெல்லுதல் எப்போதும் நிகழ போவதில்லை

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...