274 பாடல் பெற்ற தலங்களின் 2-வது சுற்றின் 8-வது பகுதி.
திருநாரையூர் கோவிலின் நிலைமை என்னை மிக தடுமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தது. அதன் காரணமாக திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில் செல்ல மறந்து அதை கடந்து இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் நோக்கி சென்றேன்.
வீராணம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. மீண்டும் பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவன் பற்றிய நினைவு வருகிறது. வரலாறு இந்த வழியாக பல முறை கடந்து சென்று இருக்கும். குறைந்தது இருபது கிலோமீட்டர் வரை ஏரி நம்முடன் பயணம் செய்கிறது.
இடது பக்கம் ஒரு இளவரசி நம்மை பார்த்து நமுட்டு சிரிப்புடன் வழி நெடுக படுத்து கிடப்பது போல் ஒரு உணர்வு. அசாதாரணமான அழகு. ஆனந்தமான இரு சக்கர வாகன பயணம். காதிலோ ஈசன் புகழ் சொல்லும் பாடல்கள் அலைபேசியில் இருந்து. உற்சாகமாய் நானும் பாடி கொண்டே சென்றேன்.
நான் சென்ற நேரம் நடை அடைக்கப்பட்டு இருந்தது. எதிரே குளம். சிறுவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். சில பேர் குளித்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி குளித்து கொண்டு இருந்தவர்களில் கோவிலில் அர்ச்சகரின் பையனும் இருந்தார். நம்மை பற்றி சொன்னவுடன் ,சிறிது நேரம் பொறுங்கள், நான் போய் சாவி வாங்கி வருகின்றேன் என்றார். சொன்னபடி செய்தார்.
அன்பாய், பணபாய் நடந்து கொள்கிறார். +12 படிக்கிறார். எதிர்காலதில் என்ன படிக்கலாம் என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தார். ராணுவத்தில் பணி புரியும் விருப்பத்துடன் உள்ளார். எனக்கு தெரிந்த பதிலை சொன்னேன். அர்ச்சகர் மகனை நல் படி வளர்த்துள்ளார் என்ற புரிகிறது.
கோவிலை சுற்றி திருமாலின் அவதாரத்தில் ஒருவகை ஓடிக் கொண்டு இருந்தது. வரலாற்றின் வரலாறு இந்த கோவிலுக்கு வந்து இருக்கிறது. ராஜராஜ சோழன் இங்கு வந்து ஈசனை வேண்டிய பிறகு, தமிழ் வரலாற்றின் உச்சம் திரு இராஜேந்திர சோழர் பிறந்தார், ஆகவே ராஜேந்திர பட்டினம் என்று பெயர் பெற்றது.
தாயை தண்டிக்க காரணமாக இருந்த வேத நூல்களை முருகன் வீசி எறிய , ஈசன் சினந்து குமரனை ஊமை குழந்தையாக மண்ணில் பிறக்க வைக்க, இக்கோவில் வந்த வேலன் அந்த வேத நாதனை வழிபட்டு பேச்சு பெற்ற தலம். ஆனால் ஈசனை கண்டதும் நாம் ஊமையாகி போகின்றோம்.
கயிலை நாதனை கண்டால் கவலைகள் கழண்டு போகிறது. நம் கண் முன்னே ,நம் மனம் திருடப்பட, கள்வன் யார் என்று தெரிந்த பிறகும், அவனை கண்டிப்பதற்கு பதில், கைகள் அவனை தொழுகின்றன. சிறிய கோவில். நிதியுதவி தேவைப்படும் கோவில்.
பொது சாலையில் இருந்து , மிக அருகே உள்ள கோவில். ஆனால் அதை பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாத காரணத்தினால் , பெரிய அளவில் கோவில் கண்டுகொள்ள பட வில்லை. ஒரு பெரிய தகவல் பலகை , பொது சாலையில் வைத்தால், கண்டிப்பாக இந்த கோவில் நல்ல கவனத்தை பெறும். அதற்கு சில பேர் அங்கே முட்டுகட்டையாக இருப்பார்கள் என்று பயந்து கொண்டு , கோவில் நிர்வாகம் செய்யாமல் இருக்கிறது என்பதை விசாரித்து அறிந்து கொண்டேன்.
சொந்த மண்ணின் வரலற்று சின்னத்தை மறைக்க விரும்பும் மனிதர்களை நினைத்து எங்கே போய் முட்டி கொள்ளுவது என்ற எண்ணத்துடன் வெளியே வந்தேன்.
பயண திட்டத்தை பார்க்க, திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில் பார்க்க மறந்தது தெரிய வர, மீண்டும் வந்த வழி சென்று, வல்லபேஸ்வரர் திருக்கோயில் அடைந்தேன்.
பயண திட்டத்தை பார்க்க, திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில் பார்க்க மறந்தது தெரிய வர, மீண்டும் வந்த வழி சென்று, வல்லபேஸ்வரர் திருக்கோயில் அடைந்தேன்.
கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கோவில் அருகே அர்ச்சகர் வீடு. அரசாங்கத்திடம் இந்த கோவில் இல்லை. ஆதலால், நகரத்தார் இந்த கோவிலுக்கான கும்பாபிசேகம் தயார் செய்து கொண்டு உள்ளனர். ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. நாவலனின் (ஈசன்) நர்த்தனம் காண, பிரம்மா, சரஸ்வதி வந்து வழிபட்ட தலம், குறுமுனி அகத்தியர் தான் படித்த வேதங்கள் மறக்காமல் இருக்க இறையை வேண்டிய இடம். அகத்தியரின் மகளாக மகாலட்சுமி பிறக்க, வராக அவதாரத்தில் வந்து விஷ்ணு லட்சுமியை மணந்த இடம்.
கும்பாபிசேகம் நடக்க இருப்பதால், யாருக்கும் பூஜை இல்லை. தனியாக ஓலை குடிசை அமைத்து , ஆகம விதிப்படி பூஜை செய்கிறார்கள். அலங்காரம் எதுவும் இன்றி ஆராவமுதன்(ஈசன்) அமர்ந்து உள்ள, யாரும் இல்லாத காரணத்தினால் , சௌகரியமாக நின்று, ஈசனிடம் பேச முடிகிறது. பிடிப்பு அற்ற வாழ்க்கை, பனிமலையன் (ஈசன்) பக்கம் நிற்கும்போது , ஒரு பக்குவத்திற்கு வருகிறது.
அறியாமல் செய்த பிழைகளும், அறிந்தே செய்த பிழைகளும், மனதில் எங்கும் அலைகின்றன. நாயன்மார்கள் காலம் போல், மீண்டும் உடல் எடுத்து இங்கே உலவ வர மாட்டயோ என் ஈசனே என்ற ஏக்கம் வருகிறது. நிலை கொள்ள முடியாமல், நின்ற மனம், ஈசனிடம மண்டியிட்டு வெளி வருகிறது. என்னால் முடிந்த நிதியுதவி அளித்து விட்டு வெளியேறினேன்.
நண்பகலை தாண்டி இருந்ததால் , செல்லும் வழியில் ஜந்து இளநீர் வாங்கி அருந்தி விட்டு, மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் கோவிலில் சற்று நேரம் கண் அயர்ந்தேன்.