Thursday, October 16, 2014

274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 7-வது பகுதி

274 பாடல் பெற்ற தலங்களின் 2-வது சுற்றின் 7-வது பகுதி
அதிகாலை எழுந்து, குளித்துவிட்டு , பயண திட்டத்தில் இல்லாத பாடல் பெற்ற தலமான வைத்தியநாதர் திருக்கோயில் , மயிலாடுதுறை தரிசிக்கலாம் என்று கிளம்பினேன்.
செவ்வாய் தோஷம் நீக்கும் கோவில் என்று சொன்னால், எல்லாருக்கும் புரியும். 6.00 am அளவில் கோவில் சென்று அடைந்தேன். மழை மண்ணை மகிழ்வித்து இருந்தது. கூட்டம் அதிகம் இல்லை. முருகன் முக்கண்ணனை வழிப்பட்டு தாயிடம் இருந்து வேல் பெற்ற இடம். சடாயுவிற்கு ராமர் தகன காரியங்கள் செய்த இடம்.
செவ்வாய் சிறப்பு என்பதால் முருகன் முன் நல்ல கூட்டம். தங்களை விடுத்து மைந்தன் கொண்டாடபடுவதை கண்டு அம்மையும்,அப்பனும் அக மகிழ்ந்து அமர்ந்து உள்ளனர். ஈசன் சந்நிதியில் யாரும் இல்லை. உலகத்தின் உச்சம் , உக்காந்து இருக்கிறது எந்த சலனமும் இல்லாமல். நீயே என் அதிபதி என ஆன பிறகு என் தலைவிதி பற்றி எனக்கான கவலை என்ற எண்ணம் வருகிறது.
விழி நீர் விழியன் விளிம்பில் நிற்க, தீடிரென்று விளக்குகள் அணைந்து போய், ஈசன் தீப ஒளி காட்டுகின்றான். தகப்பனை தொழுதுவிட்டு விட்டு தாயிடம் சென்றால், திரை போட்டு வைத்து இருக்கிறார்கள் தாயை.
சுற்றி வரலாமா என்று சிந்தனை வரும் போது, சற்றென்று திரை விலகி தீப ஆராதனை நடக்கிறது. தையல் நாயகியின் முகம் பார்த்தால் தைரியம் வருகிறது. அழகு இவளுக்கு அடிமையாகி ஏவல் செய்கிறது. தையல் நாயகன் , இவள் மீது மையல் கொண்டு திரிவது தவறே இல்லை. அழகின் முகம் அன்பை அள்ளி தருகிறது.
சுற்றி வந்தேன். கோவிலை இன்னும் நன்றாக வைத்து கொள்ள நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என்று எண்ணத்துடன், ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் நோக்கி விரைந்தேன்.
கொள்ளிடம் ஆற்று வழி பயணம், பொன்னியின் நாவல் சொல்லும் ஊர்கள் தென்படுகின்றன. கொள்ளிடம் வறண்டு போய் வெறுமை காட்ட, மனம் கசக்கி எறியப்பட்ட காகிதம் போல் சுருங்குகிறது. வளைந்து ஓடிய வரலாறு இங்கே வீழ்த்தப்பட்டு கிடக்கிறது. பாலத்தில் வண்டியை நிறுத்தி சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தேன். பலத்காரம் செய்து கொல்லப்பட்ட பருவமங்கை போல் பாழ்பட்டு கிடக்கிறாள் கொள்ளிட ஆறு. மனிதன் இயற்கையின் மிக பெரிய மிருகம் என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.
கோவில் செல்லும் வழியில் ஒரு சிறு ஆறு எதிர்திசையில் இரண்டாக பிரிந்து வருகிறது. இரண்டு சின்ன சிறுமிகள் போல், நம்மின் இரு கைபிடித்து ஈசன் கோவில் செல்லும் வழி கூட வருகிறது.
ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், கோவில் ஆள் அரவமற்று இருக்கிறது. ஈசன் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் சொல்லும்போது , தாயாரின் கவனம் திசை தப்ப, தண்டித்தான் ஈசன். தாய் இங்கு தவம் இருந்து தனது மணவாளனை மீண்டும் பெற்ற இடம். ரேவதி நட்சத்திர பரிகார தலம்.
ஓரளவு நல்ல நிலைமையில் கோவில் உள்ளது. அந்த சமயத்தில் மின்சாரம் இல்லை கோவிலில். அர்ச்சகர் தீபம் காட்டி விட்டு போய் விட்டார். நல்ல இருட்டு, கருவறை அருகே தனியாக நிற்க நடுக்கம் வருகிறது. உதடுகள் பிரிந்து உள்ளம் கவர்ந்தவனின் பெயர் சொல்ல, பயம் மெதுவாய் பதுங்கி மறைகிறது. மெல்ல நெருங்கி கருவறை கதவிடம் போய் நின்றால், காலனின் அருகாமை கரும்பாய் உள்ளே இனிக்கிறது.
சுற்றி வந்தால் எந்த பிழையும் இல்லை கோவிலில். இங்கே குரு அம்மைக்கும் அப்பனக்கும் நடுவில் நிற்கிறார். இறையின் எம்முகம் பார்த்தாலும் இனிமை தான். கோவில் நேர் எதிரே குளம் உள்ளது. குளம் தாண்டி சிறிய சிவன் கோவிலில் பெரிய லிங்கம் ஒன்று உள்ளது. வயதான அர்சகர் அங்கும் நாயன்மார் வந்த கதை சொல்கிறார். எந்தளவு உண்மை என்று புரியவில்லை. நிதி இல்லாமல் நிற்கதியில் உள்ளது. முடிந்தளவு பண உதவி செய்து விட்டு வந்தேன்.
கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், வயல் சூழ்ந்த கிராமத்தின் உள்ளே நிற்கிறது ஆலயம். நான் போகும் போது நடை அடைக்கப்பட்டு இருந்தது. ஆலயத்தை ஒட்டி அமைந்த ஒரு வீடு தள்ளி உள்ள வீட்டில் விசாரித்தால் , அவர்களே கோவில் நிர்வாகத்துக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நமது வருகையை தெரியபடுத்த , 20 நிமிடத்தில் ஒருவர் வந்தார்.
என்னையே ஆலயம் திறக்க சொன்னார். மனம் குதூகலம் அடைந்தது. இன்று நீங்கள் தான் ஆலயம் திறக்க வேண்டும் என்ற விதி உள்ளது போலும் என்றார். ஆலயம் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு உள்ளது. முனிவர்கள் சிவ பூஜை செய்ய வந்த போது, மணல் எல்லாம் லிங்கமாக தெரிய வெளி நின்று தரிசித்த தலம், ஆதிசேசன் , பதஞ்சிலி முனிவராக பிறந்து இங்கு வந்த போது, ஈசன் தனது நடன காட்சியை காட்டிய இடம்.
பதமாக நிற்கும் ஈசன் நமக்கு இதம் தருகின்றான். உடல் கொண்ட உயிர் ஈசன் முன் நிற்கும்போது , சவமாய் சரிகிறது. உற்சாகம் காட்டும் பொருள் எல்லாம் சுற்றி நிற்க, சுட்டித்தனம் காட்டும் குழந்தை , பொம்மையை மட்டும் தழுவ விரும்பவது போல், ஈசனின் பாதம் சென்று மனம் அவனையே கட்டி தழுவுகிறது பின்பு நழுவுகிறது.
கார்த்திகை நட்சத்திர பரிகார தலம். தமிழ் வருடப்பிறப்பின் போது 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை ஈசன் மீது பரப்பும் நிகழ்வு இன்றும் நிகழ்வது இயற்கை தன் நிலையில் சரியாக நிற்கிறது என்ற அறிவியல் கண்ணோட்டம் கொண்டு ஆலயத்தின் சிறப்பை விளக்குகிறார் ஜெயசந்திரன். அவரது நம்பர் 9790333377.
மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஆலயத்தை புன நிர்மாணம் செய்து இருக்கிறார். ஈசன் மேல் கொண்ட பக்தி அவர் பேச்சில் வழிகிறது. என்னால் ஆன நிதியுதவி செய்து விட்டு திரு நாரையூர் புறப்பட்டேன்.

திரு நாரையூர் பற்றி ஏற்கனவே தனியாக தனி பதிவு இட்டு உள்ளேன்.








No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...