!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 6-பகுதி!!(நிறைவுற்றது)
அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். இறைவனை மறந்த மக்களை தண்டிக்க ஈசன் வெளிப்பட்ட தலம், சம்பந்தர் ஈசனை இங்கே காண வரும்போது , ஈசன் ஜடாமுடி கோலம் கொண்டு காட்சி அளித்த தலம். சிறிய கிராமம் இது. போகும் வழியில் பள்ளி சிறுவர்கள் கை காட்டி அழைத்து செல்ல வேண்டுகின்றனர்.
நான் போய் சேர்ந்த நேரம் மதியம் 1 மணி. கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்ட போது , அவர்களே ஆள் அனுப்பி கோவில் நிர்வாகத்திற்கு தகவல் சொல்லி அனுப்பினர். சிவலிங்கம் என்ற அன்பர் வந்தார். கோவில் திறந்தார். சிறிய கோவில். கண்டிப்பாக நிதி உதவி தேவைப்படும் கோவில். அர்ச்சகர் வெளியே போய் உள்ளார் என்று தெரிவித்தார்.
மிக பொறுமையாக ஈசன் பற்றி சொல்லுகிறார். ஈசன் அவர் வாழ்க்கையில் நடத்திய திருவிளையாடல்கள் பற்றி பேசுகிறார். சித்தருக்கு எல்லாம் சித்தன் இந்த சிவலிங்கத்தை சிறை பிடித்து உள்ளான் போலும். ஈசன் மீது பித்தாய் உள்ளார்.
தீப மேனியனுக்கு தீபம் காட்டுகிறார். யோகி இங்கே மலர்ந்து இருக்கிறது. யார் வந்து பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் எனக்கென்ன என்று அமர்ந்து இருக்கிறது. கருவறையில் இருந்து கல்லறை வரை வரப்போகும் கடவுள் இது. குற்றமற்ற இறை முன் நிற்கும்போது செய்த தவறுகள் நம்மை உயிரோடு கூறுப் போடுகின்றன. வெக்கம் நம்மை நெக்கி தள்ளி ஈசனை விடுத்து வெளியேற்றுகிறது.
சுற்றி வந்தால், சம்பந்தர் நடன கோலம் காட்டுகிறார். ஈசன் ஜடாமுடியுடன் காட்சி கொடுத்தது கண்டு , சம்பந்தர் பாடிக் கொண்டே ஆடினார் என்பதை அவர் நடன கோல சிற்பம் சொல்கிறது. கோவிலுக்கு சில அன்பர்கள் சிறிய உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றனர் என்பதை கோயிலில் குவிக்கப்பட்டு உள்ள மண் குவியல்கள் சொல்கின்றன.
அம்மை தனித்த சந்நிதியில் நிற்கின்றாள். அப்பன் பித்தன். சித்தன், யோகி. யோகியின் பாகம் உடையாள் வேறு எப்படி நிற்பாள். இல்லை என்று சொல்லை மறுப்பவரின் இல்லாள் , ஏழ்மை காட்டுகின்றாள். அவளின் வெறுமை கடுமையாக நம்மை சுட, தொழுதுவிட்டு வெளியேறினேன்.
சம்பந்தர் சொர்ணகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் போது, இருட்டி விட வழி தடுமாறி நிற்க, இந்த அம்மை எதிரே போய் அழைத்து வந்து இருக்கின்றாள். அவள் அழைத்த இடம் எதலவாடி என்று இன்றும் அழைக்கபடுகிறது.
அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் விழுப்புரம். என் பயண திட்டத்தின் கடைசி கோவில். மூன்று மணி அளவில் கோவில் அடைந்தேன். நடை சாத்தப் பட்டு இருந்தது. ஈசனை தோழராக பெற்ற சுந்தரர் அவதரித்த தலம். சுக்கிரனை ஈசன் விழுங்கி விட, எங்கே ஈசன் தன்னை ஜீரணம் செய்து விடுவார் என்று பயந்து , சிவத்தியானத்தில் சுக்கிரன் அமர , பல காலம் கழித்து ஈசன் அவரை வெளி எடுத்து நவக்கிரக பதவி கொடுத்த தலம். கருடன் , விஸ்ணு வழிபட்ட தலம்.
பெரிய கோவில். நல்ல நிலையில் உள்ளது. தென்னகத்தின் இறைவன் இங்கே கோவில் கொண்டுள்ளான். நம்பிக்கை என்பதை என் நெஞ்சில் விதைத்தவன் , இங்கே நடு நாயகமாக நிற்கின்றான் . நம்மை பார்த்து சிரிக்கின்றான். என்ன முறையான வாழ்க்கை பயணத்தில் நான் பயணிக்கின்றேன் என்பதும், ஏன் ஈசனே திரும்ப திரும்ப என் நினவை வழி மறுக்கின்றான் என்பது இன்று வரை புரிபட வில்லை.
கல்லுக்குள் அமர்ந்து, காலத்தின் கணவான் ,நம்மை கனிவாய் பார்க்கின்றான் என்பதை , உள்ளுக்குள் இருக்கும் உள்ளத்தை உலுக்கி, விழியை கழுவும் விழிநீர் நமக்கு உணர்த்துகிறது.
தாய் தனி கோலம் கொண்டு ஆள்கிறாள். உலகத்தின் அற்புதம் , அழகாய் உருவெடுத்து நமக்கு முன் அன்னையாக நிற்க, நாம் அவளுக்கு பிள்ளை ஆகின்றோம். தந்தையை எப்போதும் என் நினைவில் நிறுத்து என் தாயே என்ற தவிப்பாய் வேண்டுதல் வருகிறது
.
அன்னையின் அண்ணன் , உள்ளே தனி கோவில் கொண்டு உள்ளார். அவருக்கு பெயர் வரதராஜ பெருமாள். வாழ்வியல் தத்துவம் சொன்ன இறை இங்கே வீற்று இருக்கிறது. அர்ச்சகர் காலில் வலி இருந்தாலும், பரந்தாமானுக்கு சேவித்து வருகிறார்.
.
அன்னையின் அண்ணன் , உள்ளே தனி கோவில் கொண்டு உள்ளார். அவருக்கு பெயர் வரதராஜ பெருமாள். வாழ்வியல் தத்துவம் சொன்ன இறை இங்கே வீற்று இருக்கிறது. அர்ச்சகர் காலில் வலி இருந்தாலும், பரந்தாமானுக்கு சேவித்து வருகிறார்.
கோவில் சில குண்டர்களால் விளையாட்டு மைதானமாக பயன்படும் அவலத்தையும் நேரில் கண்டு உள்ளேன். அதை பற்றி தனி பதிவு பதிந்து உள்ளேன்.
ஈசனிடம் விடை பெற்று , அங்கிருந்து பரிகல் நரசிம்மர் கோவில் சென்று அடைந்தேன். பரிகாசுரன் என்ற அசுரனை கொல்ல இறை வெளிப்பட்ட தலம். எதிரிகள் அழிந்து போக வேண்டும் என்று பல அரசியல் வாதிகள் வந்து வழிபடும் தலம். நான் போகும் போது கூட ஒரு அரசியல் வாதி வந்து போனார்.
உக்கிரம் காட்டிய நரசிம்மர் , துணைவியுடன் உள்ளமர்ந்து உள்ளார். "எங்கும் நிறையும் இறை" என்ற வார்த்தையை உண்மையாக்க , இறை கொண்ட வடிவம் நரசிம்மம். வரிசையில் நிற்கும்போது அர்ச்சகர் ஒருவர் நரசிம்மரின் வரலாறு சொல்கிறார்.
"தவறாய் யோசிக்க சொல்லும் நிலையற்ற மனதை வென்று எடுக்க உதவுங்கள்" என் பெருமானே என்ற கோரிக்கையை வைத்தேன். ஆலயம் சுற்றி வந்தேன். செழிப்பான கோவில். பஞ்சுமுக அமைப்பு கொண்ட விளக்கின் வடிவமாக பெருமாளை வெளி பிரகாரத்தில் வைத்து உள்ளார்கள். பேருண்மையை கொண்டவன் இவன். அண்டத்தை வாயில் காட்டியவன், இங்கே பெருமாள் என்று முகம் காட்டுகின்றான்.
பணிந்து விட்டு வெளியே வந்தேன். கோவில் விடுத்து வீடு செல்ல வேண்டிய நேரம். இறையை சுற்றிய நினைவுகள் இனிதே நிறைந்து நிற்க, இன்பமாய் இரு சக்கர வாகனத்தை சென்னை நோக்கி செலுத்தி, இரவு பத்தரை மணி அளவில் , திருவான்மியூர் வந்து அடைந்து, ஈசனுக்கு நன்றி சொல்லி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.