இன்று இந்திய பேரரசின் 66-வது குடியரசு தினம். சுதந்திர தளையில் இருந்து விடுபெற்ற இந்திய பேரரசின் சுதந்திர தேவி, தன்னை முடியரசு அற்ற குடியரசு ஆக அறிவித்து , தன் குடிமக்களை குளிர்வித்த நாள். தன்னை பாதுகாக்கும் இந்திய படைகளின் படை பலத்தை கண்டு அகம் மகிழும் நாள்.
உலகில் நம் தேசம் வளர்ந்த வரலாறு போல் வேறு எங்கும் இல்லை. அன்பையும், ஆன்மிகத்தையும், பொன்னையும் அள்ளித்தந்த தேசத்தை , அடிமை படுத்தி வதைத்த அன்னியர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா. வரலாற்றின் பக்கங்களை வரிசைபடுத்தி வாசித்தால் ,விக்கித்து போய் விடுவோம்.
அந்நியன் எவராலும் பாரதத்தின் எல்லா பகுதியையும் நிம்மதியாக முழுமையாக ஆண்ட வரலாறு கிடையாது. எங்கேயாவது ஒரு பகுதி அந்நியனை அரிந்து அழித்து கொண்டு இருந்தது. என்ன செய்வது சுதந்திரம் இந்த தேசத்தின் சுவாசத்தில் இருந்தது. அதன் மைய புள்ளியான ஆன்மிகத்தில் இருந்தது.
எந்த இறைவன் எல்லாருக்கும் பொதுவானவனோ, நட்பானவனோ அவனை அன்னியபடுத்தி , அவனிடம் கட்டளைகள் பெற்றதாக சொல்லி , ஆண்டவனுக்கு அடிமை என்று ஆண்டவரின் பிள்ளைகளான மனிதர்களை அடிமைபடுத்தி அவர்களின் ஆன்மிக சுதந்திரத்தை பறித்தது, மதத்தை மன்னராக வைத்து கொண்டு இருந்த தேசங்கள்.
ஆனால் பாரத தேசம் , இறைவனை தோழன் என்று சொன்னது. ஆண்டவனின் அருள் வடிவத்தை தேர்ந்து எடுக்கும் சுதந்திரத்தை தன் மக்களுக்கு அளித்தது. உடலை உயிர்ப்பித்து கொண்டு இருக்கும் ஆன்மாவை தழுவி ஆன்மிகத்தை தரும் ஆண்டவரின் விசயத்திலே சுதந்திரத்தை கொடுத்த என் தேசம், உடலை உருக்கி அடிமைபடுத்த நினைத்த அன்னியர்களிடம் அடி பணிந்து போகுமா என்ன.
ஆகவே என் தேசத்தை கொள்ளையடித்து பார்த்தார்கள், கொலை செய்து பார்த்தார்கள், என் தாய் நாடு தாழ்ந்து விடும் என்று. என் தேசம் வளர்ந்து விட கூடாது என்றே ஒரே காரணத்திற்காக தேசத்தை இரண்டாக , மூன்றாக வெட்டிப் பிளந்தார்கள். வெட்டி விட்டால் நின்று விடுமோ , என் தாய் தேசத்தின் வளர்ச்சி.
மொட்டாகி நின்று கிடந்த வளர்ச்சி என்ற பாரத தேசத்தின் மலர் மலராமலே இருக்க எண்ணி, இருண்ட தேசமாகவே வைக்க முயற்சித்தான் அன்னியன். சுதந்திர தீயை தேடித் திரிந்த மண்ணின் மைந்தர்கள் , மின்மினி பூச்சிகளாக மாறி, தங்களை எரித்து , சூரியனை தந்தார்கள் அந்த மலருக்கு.
கதிரவனை பருகி , சுதந்திர காற்றை சுவாசித்த அந்த மலர் , வளர்ச்சி எனும் இதழ் விரித்தது. இன்று உலகம் எங்கும் உள்ள தேனீக்கள் , இந்த மலரை நோக்கி தான் பயணிக்கின்றன.
கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம்மை முடமாக்க நினைத்தவர்களை , முறியடித்து, முடி சூடி உள்ளோம். அதிகாரம் கொண்டு ஆண்ட ஆங்கிலயேன் , படை பலத்தின் வல்லமையில் , இன்று நமக்கு கீழ் நிற்கின்றான்.
இந்தியா இன்று எந்த தேசத்தாலும் தவிர்க்க முடியாத சக்தி. உலகம் இந்தியாவை உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது. கலாச்சாரத்தின் கட்டுப்பாடுகளை வைத்து கொண்டு இந்த தேசம் எப்படி முன்னேறுகிறது என்று யோசிக்கிறது.
நாமும் யோசிக்க வேண்டும். எவ்வளவு உன்னதமான தேசத்தில் பிறந்து உள்ளோம் என்று. எங்கே இருந்தாலும் , இன்று ஒரு நாளாவது நம் தேசத்தை எண்ணி உவகை கொள்ள வேண்டும். நம்மை பாதுகாக்கும் இந்திய பேரரசின் படைகளை குறித்து நன்றி கொள்ள வேண்டும். முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்பதற்கு நம் தாய் தேசமே மிக பெரிய வரலாற்று சான்று என்பதை நம் பிள்ளைகளுக்கு சொல்லி தர வேண்டும்.
இந்திய பேரரசின் குடியரசு நமக்கு பெற்று தந்த விசயங்கள் பல. சொல்லி தந்த விவரங்கள் பல. எனக்கு இப்படி சொல்லி தந்து இருக்கிறது என்று நமபுகின்றேன்" நம் வீதி எங்கும் விஷ கற்கள் போட்டு வைத்து வழி மறித்தாலும், ஆன்மாவை அட்சய பாத்திரமாக்கி , வளர்ச்சி என்ற விதைகளை வாரி எடுத்து , வாழ்க்கை என்ற நந்தவனத்தை நாமே கட்டியமைக்க முடியும்"
வாழ்க தாய் திருநாடு!! , வாழ்க இந்திய குடியரசு!!.
குடியரசு தினத்தை போற்றுவோம், நல்ல குடிமக்களாக நடந்து இந்திய பேரரசுக்கு நன்றி சொல்வோம்.