274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 6-வது பகுதி
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில். இந்த கோவிலின் வரலாறு யாவரும் அறிந்ததே. பணமே பிரதானம் எண்ணும் கோவில்களில் இதுவும் ஒன்று. கூட்டம் சனிபகவானை மொய்த்துக் கொண்டு நிற்க, ஈசன் தனித்து நிற்கின்றான். நளனுக்கு நற்கதி கொடுத்த நீலகண்டன், பொய் சொன்ன கணக்காளரின் தலை கொய்ய திரிசூலம் ஏவிய இடம்.
இறை இங்கே தன் பெயரை இன்னொருவருக்கு விட்டு கொடுத்து, விலகி நிற்கிறது. புகழுக்கு புளாங்கிதம் அடைந்து பகையை பரிசாக பெறுவோர், ஈசனின் இச்செயலை எண்ணி பார்க்க வேண்டும். அபிஷேக பிரியன் அன்பை அள்ளி தருகின்றான்.
என் பயண திட்டப்படி மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், பார்க்க வேண்டும், ஆனால் பெயர் குழப்பத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சென்று விட்டோம். மார்க்கண்டேயரை காக்க ஈசன் எமனை எரித்த இடம், பாம்பாட்டி சித்தர் வழிபட்ட இடம். அபிராமி பட்டர் அவதரித்த இடம். இரவு 9 மணியானாலும், கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது. மரண பயம் இங்கே மனிதர்களை மலையாள்பாகன் (ஈசன்) முன் மண்டியிட செய்கிறது.
ஆயுள் பலம் கேட்டு ஆண்டவனை சென்று அடையும் காலத்தை நீட்டிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. இருக்கும் நாள் வரை இறையின் சிந்தனைகள் மட்டும் இருந்து வர வேண்டும் என்ற வேண்டுதலே வருகிறது. என் சிவனே!! என்னை அழைக்கும் நாளில் , ஈசனே உன் பெயர் மட்டும் சொல்லி ஆவி பிரிந்து, நீ வந்து என்னை அரவணைக்க வேண்டும் என்ற மெல்லிய பதற்றம் மனதில் வருகிறது.
தாயார் சந்நிதி குங்குமத்தின் குளுமையில் நிற்கிறது. அமாவாசையை பௌர்ணமி என்ற சொன்ன அபிராமி பட்டற்காக அம்மை தன் முகம் காட்டி , முழு நிலவை காட்டினாள் என்ற வரலாறு மெய் என்று சொல்கிறது அம்மையின் முகம். பொய்யாய் நிற்கும் உடல், மெய்யாய் நிற்கும் அன்னை முன் வரும் போது, உயிர் குருவி உலகை விட்டு பறந்து விட துடிக்கிறது. போதும் இந்த வாழ்க்கை என்ற எண்ணம் வருகிறது
என்னவோ தெரியவில்லை , இந்த கோவில் மரணத்தை பற்றி மனதிடம் பேச வைக்கிறது.
அன்று இரவு திருக்கடையூரில் தங்க முடிவு செய்து விட்டதால், சம்பத்திடம் இருந்து விடை பெற்றேன். விடை பெரும் முன், எனது வினாவாக சம்பத் “ஏன் என்னை தொடர்ந்து வந்தார், ஏன் சிரமப்பட்டு கொள்கிறீர்கள் திருதளிசேர் கோவிலுடன் நீங்கள் நின்று கொள்ளுங்கள் என்று சொன்ன பிறகும் ஏன் இந்த அலைச்சல்” என்று முன் வைத்தேன்.
அவர் சொன்ன பதிலில் ஆடிப் போய் விட்டேன். “நேற்றைய இரவு அவர் கனவில் , சாய்ந்து நிற்கும் ஒரு தட்சிணாமூர்த்தி உள்ள கோவிலை தரிசனம் செய்வது போல் வந்தது என்றும், காலையில் இருந்து குழப்பமாக இருந்ததாகவும், நீங்கள் வந்ததும் உதவ தோன்றியதாகவும், தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயிலில் அதே மாதிரி சாய்ந்து நின்ற தட்சிணாமூர்த்தி கண்டதும் மனம் அதிர்ந்தாகவும், இது வரை அந்த கோவில் பற்றி அறிந்திருக்க வில்லை என்றும், இன்று உங்களால் கனவு மெய்ப்பட்டது” என்றும் சொன்னார். அதனால் என்னை தொடர்ந்து வந்து கோவில் தரிசக்க விரும்பியதும் ஒரு காரணம்.
எல்லாம் ஈசனின் கருணை அன்றி வேறு எதுவும் இல்லை.
விடுதியில் தங்கும் எண்ணத்தை கைவிட்டு, தன் வீட்டிற்கு வந்து தங்குமாறு வற்புறுத்தினார். ஆனால் இரவின் தனிமையில் சென்று வந்த கோவில் பற்றி குறிப்புகள் எழுத வேண்டும் என்ற காரணத்தினால், அன்பாக மறுத்து விட்டேன். சம்பத் மிக இனிமையானவர். அவருடன் கோவில் சென்றது மனதிற்கு மிக நிம்மதி. கோவில் உள்ளே நுழைந்ததும் ஊமையாகி விடுகிறார்.
எந்த வித பேச்சும் இல்லை. நீயே அறிந்து தெரிந்து கொள், என்பது போல் விலகி கொள்கிறார். நாமாக கிளம்பலாமா என்று கேட்டால் தான் கிளம்பலாம் என்று சொல்கிறார்.
எந்த வித பேச்சும் இல்லை. நீயே அறிந்து தெரிந்து கொள், என்பது போல் விலகி கொள்கிறார். நாமாக கிளம்பலாமா என்று கேட்டால் தான் கிளம்பலாம் என்று சொல்கிறார்.
யார் வந்தாலும் தன்னால் ஆன உதவியை செய்வதாக சொல்லி தன் அலைபேசி எண்ணை தந்தார். 9486114032, காரைக்காலில் உள்ள கோவில் செல்லும் அன்பர்கள் உங்களால் கோவில் விலாசத்தை அறிய முடியவில்லை என்றால் இவரை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ளும் முன் இவர் மருத்தவ துறையில் உள்ளவர், பொறுப்பான குடும்ப தலைவர் என்பதை நினைவில் நிறுத்தி , தொடர்பு கொள்ளுங்கள். அலைபேசியில் சார்ஜ் இல்லாததால் , என்னால் அவரின் புகைபடத்தை எடுக்க முடியவில்லை. புகைப்படம் அனுப்ப சொல்லி கேட்டு உள்ளேன். வந்தவுடன் பதிவு இடுகின்றேன்.
அவரிடம் பிரியா விடை பெற்று , கோவில் அருகே விடுதி எடுத்து தங்கினேன். ஜெயா அவர்களின் கோர்ட் தீர்ப்பால் வெளியூரில் இருந்து வந்த மக்கள் , திரும்ப பேருந்து கிடைக்கமால் கோவில் வெளியே தங்கினார்கள். ஒரே ஒரு ஹோட்டல் மட்டும் திறந்து இருந்தது. மிக சரியான கூட்டம். உணவின் விலையும் அதிகம். விடுதியின் விலையும் அதிகம். வதந்திகள் வேகமாக பரவி, மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருந்தது.
குளித்து விட்டு, உணவு எடுத்துக் கொண்டு, அலைபேசியை சார்ஜ்ல் போட்டு விட்டு, கோவில் நடை சாத்தும் வரை , கோவில் வாசலில் அமர்ந்து , சென்று வந்த கோவில்களை பற்றி குறிப்பு எழுதி கொண்ட இருந்து போது, ஒரு அன்பர் ஒரு வியாபாரியிடம் மொத்தமாக வாழைப்பழம் வாங்க பேரம் பேசி கொண்டு இருந்தார். என்ன வென்று விசாரித்த போது, கோவில் வந்த மக்கள் பலர் உணவு சரியாக உட் கொள்ளாமல் உள்ளதாகவும் , வாழைபழமாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைப்பதாகவும் சொன்னார்.
இதுவே கருணை. ஈசன் காட்டும் பேரன்பு. எத்தனை கோவில் சுற்றினாலும் , இந்த மனிதரின் அன்பின் முன்பு, நாம் செல்லாகாசு. எழுதுவதை நிறுத்தி விட்டு, நானும் அதில் பங்கு கொண்டு, இருவரும் சேர்ந்து வாழைப்பழம் வாங்கி வினியோகம் செய்தோம். மக்களிடம் ஒரு மகிழ்வு தெரிந்தது
என்னிடம் இருக்கும் பழம் தீர்ந்தவுடன் , அவரை தேடினால் , ஆளை காண முடியவில்லை. சுற்றி சுற்றி வந்து பார்த்தாலும் ஆளை காணவில்லை. செய்த வேலை முடிந்தவுடன் போய் விட்டார் போலும். அவரின் பெயரை கூட அறியாமல் போய் விட்டோம் என்று உள்ளே உறுத்தியது
நேராக கோவில் முன் வந்து விழுந்து வணங்கி விட்டு, விடுதியில் போய் நன்றாக உறங்கினேன்.