!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 4-பகுதி!!
அதிகாலை எழுந்து , பயணித்து , திருவெண்ணெய் நல்லூர் அடைந்தேன். அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணெய் நல்லூர், விழுப்புரம். ஊர் அமைதியாக இருந்தது. கோவில் அருகே இருந்த கடையில் இருந்து சிவசுப்ரபதம் தவழ்ந்து கொண்டு இருந்தது.
முதியவராக வந்த ஈசன், சுந்தரரை திருமண பந்தத்தில் இருந்து தடுத்து , தனக்கு அடிமை என்ற நிரூபிக்க, வழக்கு தொடுத்து வாதாடிய தலம்.தாருகாவனத்து முனிவர்கள் அகந்தை அழிந்து , தவம் புரிந்த தலம். அர்ச்சுனன் வழிபட்ட தலம். எவன் வேதங்களின் நாயகனோ , அவனை சுந்தரர் பித்தன் என்று முதன் முதலில் அழைத்த தலம்.
கோவில் உள்ளே நுழைந்தும், இடப்பக்கம் ஈசனுக்கும் , சுந்தரர்க்கும் , வழக்கு நடைபெற்ற மண்டபம் உள்ளது. ஈசனின் பாதங்கள் நெடும்நேரம் பதிய பெற்ற இடம். ஈசனின் திரு உருவத்தை இங்கே பதிந்து உள்ளார்கள். சுந்தரரை வாதம் செய்து அடிமையாக கொண்டவன், வழக்கின்றி ,ஒரு வார்த்தை இன்றி, நம்மை அடிமையாக கைக் கொள்ளும் விந்தையயை என்ன வென்று சொல்வது.
வெளி வந்து கோவில் உள்ளே போனால், கோவில் பிரமாண்டமாக இருக்கிறது. சுந்தரர்க்கு தன்னை அறிவித்த ஈசன், இந்த கருவறையில் தான் மறைந்தான். நற்றுணைநாதன் நம்மை நோக்கி நலமாய் என்று கேட்கின்றான். உலகின் மொத்த அழகும் இங்கே ஈசனிடம் அடைக்கலமாகி அவனுக்கு அரணாய் நிற்கிறது. ஈசனை விட்டு, மங்கையரின் அழகு கண்டு மயங்கி தவித்த காலங்கள், மனதிற்குள் ஒளிர்கின்றன.
பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மலர்கள் ஈசனின் தலையில் இருந்து அவர் பாதம் நோக்கி பணிகின்றன. “அல்லல் என் செய்யும், அறுவினை என் செய்யும், தொல்லை வல்வினை தொன்தான் என் செய்யும், தில்லை மாநகர் சிற்றம்பலமாக்கு” என்ற பாடல் வரிகள் நம்மை அறியாமல் நமக்குள் வருகின்றன.
கருவறை உள்ளே, முதியவர் வேடம் பூண்டு வந்த ஈசன் , அணிந்த மிதியடிகள் வைத்து உள்ளனர்.
கருவறை உள்ளே, முதியவர் வேடம் பூண்டு வந்த ஈசன் , அணிந்த மிதியடிகள் வைத்து உள்ளனர்.
யாருடைய பாதங்கள், நமது பாவங்களை கழுவி விடுமோ, அவரின் பாதங்களை சுமந்த பாத ரட்சைகள் நம் கண் முன்னே. தொட்டு தழுவ முடியவில்லை நம்மால், தலை மீது வைத்து கூத்தாட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மீண்டும் மீண்டும் அதை பார்த்து விட்டு, கோவில் சுற்றி வந்தேன். நன்றாக வைத்து இருக்கிறார்கள்.
தாயார் பச்சை பட்டு உடுத்தி, நம்மை பரவச படுத்துகின்றாள். ஈசனின், சரி பாதி, தனி உருவம் கொண்டு, தனிமையில் தன்மையாக நிற்கின்றாள். தாயை தொழுது விட்டு, வெளியேறினேன்.அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், இடையாறு, விழுப்புரம். ஈசன் , அம்மைக்கு, சிவ ரகசியம் சொன்னதை மறைந்து இருந்து கேட்ட சுகபிரம்ம முனிவர், சாபம் பெற்று , மானிட பிறவி கண்டு, ஈசனை வழிபட்டு பாவ விமோசனம் பெற்ற தலம்.
நான் சென்ற நேரம் கோவில் நடை திறக்க வில்லை. 7.30 மணி ஆன பிறகும் நடை திறக்கும் அறிகுறி இல்லை. இத்தனைக்கும் அர்ச்சகர் வீடு மிக மிக அருகில் உள்ளது. அர்ச்சகர் வீட்டின் வெளியே மிக ஏழ்மை நிலையில் இருந்த இரண்டு பேர் காத்து கொண்டு இருந்தனர். காலை 5.30 மணி அளவில் இருந்து காத்து கொண்டு இருப்பதாக சொன்னதும் மனம் கனத்து போனது. அர்ச்சகர் வீட்டின் கதவை தட்டி திறக்க தயங்கிய காரணம் என்ன வென்று நான் தனியாக குறிப்பிட தேவை இல்லை.
நான் கதவை தட்டி , கோவில் திறக்க வேண்டினேன். இளம் வயது அர்ச்சகர் வந்தார், தந்தை வெளியே சென்று இருப்பதாகவும், இது கிராமம், இப்படி தான் இருக்கும் என்று சொன்னார். இது வரை சென்று வந்த கோவில்களில் , இந்த கோவிலில் தான் இப்படி ஒரு வாசகம் கேட்டேன். கிராமம் என்றால் இறைவனுக்கு நேரம் தவறாத பூஜை தேவை இல்லையா. கோவில் மிக சுமாராக இருக்கிறது. வருமானம் பெரிய அளவில் இல்லை.
பெரிய அலங்காரம் எதுவும் இன்றி அருளப்பன்(ஈசன்) அமர்ந்து உள்ளான். கால சக்கரத்தின் அச்சாணி எவரோ , அவரின் ஆலயத்தின் நிலை நம் முகத்தில் அறைகிறது. முக்காலம் அறிந்த ஒன்று நம் முன்னே நிற்கிறது என்பது மூளையில் உறைக்க, எக்காலம் வந்தாலும், உன்னை மறவாத மனமே வேண்டும் என் ஈசனே என்ற பீறிடல் உள்ளே எழுகிறது. மரணத்தை தழுவும்போது என் ஐயனே நீயே வந்து என்னை தழுவ வேண்டும், உன் பேர் சொல்லி தான் உயிர் உடலை துறக்க வேண்டும் என்ற வேண்டுதல் வருகிறது.
தாயை கண்டால், தவிப்பாய் வருகிறது. ஆடை மட்டும் அணிந்த அரசி இவள். கணவன் நிலை கண்டு கலங்கி நிற்கும் மனைவியாக நிற்பது போல் உள்ளது. கவலை கொண்டவள் முகத்தில் , மைந்தனக்கான கனிவை உற்று நோக்கினால் அறிய முடிகிறது. சுற்றி வந்தால், சுகம்பிரம்ம முனிவர் சுகமாய் அமர்ந்து உள்ளார். என்னால் முடிந்த உதவி அளித்துவிட்டு வெளியே வந்தேன்.