!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 2-பகுதி!!
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு. சம்பந்தரை கொல்ல சமணர்கள் அனுப்பிய பாம்பை , ஈசன் பாம்பாட்டியாக வந்து பிடித்து சம்பந்தரை காத்த தலம். ஆண் பனை மரங்கள் ஈசனின் அருளால் பெண் பனை மரங்களாக குலை தள்ளிய அதிசயம் நடை பெற்ற தலம். மிக நல்ல நிலையில் உள்ள கோவில். எந்த குறையும் இல்லாமல் ஈசன் நிற்கின்றான்.
வெள்ளை வேட்டி அணிந்து வெள்ளிச்வரன் அருள்கின்றான். கலியுகத்தின் எட்டாத இறை, இங்கே நமக்கு கிட்ட நிற்கிறது. வாழ்வின் அர்த்தம் ஈசன் முன் நிற்கும்போது விளங்குகிறது. வாழ்வின் வழித்தடம் எங்கும், என் வழித்துணையாய் வா என் அப்பனே என்று வேண்டி கொண்டு கோவில் விடுத்து வெளி வந்தேன்.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். திண்டிவனம்-பாண்டிச்சேரி சாலையில் உள்ளது. கடுமையான மழை, இருசக்கர வாகனத்துடன் சேர்த்து என்னை அள்ளியது. ஈசன் முகம் பார்க்க வேண்டும் என்று எண்ணமே இருந்ததால் , நிற்காமல் பயணத்தை தொடர்ந்தேன். ஆனால் ஈசன் இங்கு முகம் காட்ட மறுத்தான். கோவில் அர்ச்சகர் வெளி ஊர் சென்று விட்டார்.
வீட்டில் விசாரித்ததில், சரியான தகவல் இல்லை. வெளி ஊரில் இருந்து கோவில் பார்க்க வந்துள்ளோம் என்று சொன்ன பிறகும், அர்ச்சகர் வீடு அலட்சியமாக இருந்ததாக பட்டது எனக்கு. எப்போது அவர் திரும்பி வருவார் என்று உறுதியாக அவர்களால் சொல்ல முடியவில்லை. பின்பு தினமலரில் குறிக்கப்பட்ட நம்பரை தொடர்பு கொண்டேன். கோவில் சம்பந்தப்பட்டவர் போலும், மிகவும் பொறுமையாக கோவிலை பற்றி தகவல் சொன்னார். அர்ச்சகர் நம்பர் தந்தார்.
அர்ச்சகர் நம்பரை தொடர்பு கொண்ட போது, வெளியூரில் இருப்பதாகவும் , நாளை தான் வருவேன் என்றும் பதமாக பேசினார். வேறு அர்ச்சகர், நாளை வந்து பூஜை செய்வதாக சொன்னார். அந்த அர்ச்சகரின் நம்பர் கேட்டதற்கு , பல வித காரணத்தை சொல்லி மறுத்துவிட்டார். யாரும் வந்து பூஜை செய்ய போவதில்லை என்பதை அவர் நம்பர் தர மறுத்ததில் இருந்து புரிந்து கொண்டேன்.
ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் கோவிலில் வெளி நின்று ஈசனை வணங்கி விட்டு, நாளை உனக்கு அந்த ஒரு கால பூஜையும் நடக்காதா என்ற வேதனையுடன் அடுத்த கோவில் நோக்கி சென்றேன்.
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். சாளுக்கிய மன்னனுக்கு ஈசன் மானாக வெளிப்பட்டு அருள் செய்த தலம். நான் சென்ற மதிய பொழுது, கோவில் நடை திறந்து இருந்தது. ஈசன் அமைந்த பகுதி பூட்டப்பட்டு இருந்தது. அருகில் தான் அர்ச்சகர் வீடு என்பதால், அர்ச்சகரை ஈசன் முகம் காட்டும் படி வேண்டினேன். இளவயது ஒத்த அர்ச்சகர் வந்து ஈசனை காட்டினார்.
மானாக வந்தவன், ஒயிலாக நிற்கின்றான். வேதங்களின் அதிபதி, முன் நிற்கும்போது வெளித்தொடர்புகள் மெல்ல அறுகின்றன. கற்பனைக்கு எட்டாதவன் காலடி பற்றி, மனம் கண்ணீரில் கரைகிறது. இன்னும் எத்தனை நாட்கள் என் ஈசனே, உன் திருவடி நிழலில் நிரந்தரமாய் இளைப்பாற என்ற கேள்வியுடன் விடைபெற்றேன்.
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். இந்த கோவில் செல்லும்போது நடை சாத்தி இருந்தது. அங்கிருந்த குளத்தின் அருகே அமர்ந்து இருந்தேன். கடுவெளி சித்தரக்காக , ஈசன் சினந்து அரசனையும் , மக்களையும் தண்டித்த தலம், பார்வதி தாயார் அசுரர்களை கொன்ற பழி நீங்க தன் மன்னவனை வழிபட்ட தலம்.
கோபம் கொண்டு மூன்றாய் வெடித்து சிதறிய லிங்கத்தை , செப்பு பட்டயத்தில் ஒன்றாக சேர்த்து வைத்து இருக்கிறார்கள். போருக்கு கிளம்பும் போர் படை கவசம் கொண்டு ஈசன் நிற்பதாக தோன்றியது எனக்கு. முதல் கள பலியாக என்னை ஏற்றுக் கொண்டு, என் பிறவிக்கு ஒரு முற்று புள்ளி வை என் ஈசனே என்று மனம் வேண்டுகிறது.
மங்கி போன மனம், மாசற்ற சோதி முன் , உடல் பிடித்து நிற்க கூட முடியாமல் முடங்குகிறது. சுற்றி சுற்றி வந்து நின்றாலும் , சிறுகதையாக முடியாமல் , நெடும்கதையாக ஈசனை தொடரும் பயணம், நெடும் தூரமாக நீள்கிறது. பயணம் இன்னும் தொடரும்......
No comments:
Post a Comment