274 சிவலயங்களுக்கான- 2 வது சுற்றில் , இந்த முறை, கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி , காரைக்கால், மயிலாடுதுறையில் உள்ள சிவன் கோவில்களை தரிசித்து வந்தேன். பெரும்பாலான கோவில்கள் என்ன நிலைமையில் இருக்கிறது என்று நான் எழுதுவதற்கு முன், முதலில், தேவாரம் கிடைக்க காரணமான நம்பியண்டவார் வாழ்ந்த
திரு நாரையூர் கோவிலின் நிலைமை
என்ன, நம்பியாண்டார் நம்பி
வாழ்ந்த இடத்தின் நிலைமை இன்று என்ன என்று நாம் தெரிந்து கொள்வது ஒவ்வரு
ஹிந்துவின் கடமை.
ஈசன் நாரைக்கு முக்தி கொடுத்த தலம், பொல்லா பிள்ளையார், நம்பிக்கு , அது இறையின் பிள்ளை என்று சொன்ன இடம். தேவாரம் கிடைக்க இவரே காரணம். ஒவ்வரு சிவச்சரியர்களும், சிவ பக்தர்களும் நம்பிக்கு கடன் பட்டவர்கள். நம்பியை புறந்தள்ளி தேவாரத்தை மட்டும் நாம் கொண்டாட முடியாது.
ஆலயத்தை பற்றிய மிக பெரிய எதிர்பார்ப்புடன் போனால், அதிர்ச்சியாக இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாமல் தோய்ந்து போய் இருக்கிறது. ஆனால் ஈசன் இன்முகம் காட்டுகின்றான். மகனை தரிசித்து விட்டு அப்பனை தரிசிக்க வேண்டும் என்ற முறை கொண்டு, கால்கள் பொல்லா பிள்ளையார் நோக்கி செல்கின்றன. பொல்லா பிள்ளையார் பொலிவுடன் இருக்கிறார். மௌனமாய் நிற்கிறார்.
தேவார சுவடிகள் இருக்கும் இடம் காட்டிய மகாதேவனின் மைந்தன் அல்லவா இவர். கோவிலை காப்பாறும் வழியை சுட்டிக்காட்டு என்று மனம் வேண்டுகிறது. மைந்தனை விடுத்து அப்பனிடம் நகர்ந்து செல்கின்றேன்.
ஈசனை பற்றி எப்படி சொல்வது. சாந்தமாய் சலனமற்று அமர்ந்து நமது சித்தத்தை சிதறடிக்கிறார். சிந்திக்கும் திறன் இந்த சவுந்தர்யேஸ்வரர் முன் நிற்கும்போது சரிந்து விழுகிறது. விழுந்த மனம் ஈசன் பெயர் சொல்லி அலறுகிறது. ஈசன் தாள் பிடித்து மெல்ல எழும்புகிறது. தீபத்தின் சுடர் ஒளி , ஈசனின் மீது படர்ந்து பாய , "தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான்" என்ற தேவார வரிகள் நினைவுக்கு வருகின்றன.
அப்பனை விடுத்து அம்மையிடம் வருகின்றேன். பெரிய அலங்காரம் எதுவும் இன்று அம்மை நிற்கின்றாள். ஏழைத்தாய் என்று அழைக்கும் அளவில் இருந்தாலும் , எழில் அரசி இவள். ஏழைத்தாய் என்றாலும். இந்த ஜகத்தின் தாய் அல்லவா. தன் கணவனின் இருப்பிடம் நிலை கண்டு கவலை கொண்டு இருப்பதாக தோன்றுகிறது. திரிபுரசுந்தரி என்று பெயர் கொண்டவளின், திருமுகம் வாடிய தாமரை போல் இருக்கிறது. பிள்ளைகள் தாயின் தொய்வான முகம் கண்டு வருந்த நேரிடம் என்று எண்ணத்தால் என்னவோ, இருளில் தன் முகத்தை மறைத்து கொண்டு அம்மை நிற்கின்றாள்.
என்னுடைய பொருளாதார இயலாமை எண்ணி மனதிற்குள் வலி வருகிறது. அழுகை வருகிறது. அதிகபட்சம் ஒவ்வரு கோவிலுக்கும் நூறு ரூபாய் மேல் என்னால் கொடுக்க முடியாது என்பது என் நிலைமை. மன்னித்து கொள் என் அன்னையே என்று சொல்லிவிட்டு. கோவில் வாசற்படிக்கு வந்தேன்.
கோவிலை துப்பரவு பண்ணும் பெண்மணியிடம் பேச்சு கொடுத்தேன். அவரின் மாத சம்பளம் 75 ரூபாய். அதுவும் ஒழுங்காக தருவதில்லை என்றும், கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் , நிலத்திற்கான கூலியை தருவதில்லை. கேட்பதற்கு எந்த அதிகாரியும் இல்லை என்று குறிப்பிட்டார். மீறி வற்புறுத்தினால் , கோவிலை பூட்டி , சாவியை காவல்துறையிடம் கொடுத்து விடு என்று சொல்கிறார்கள் என்றார். ஈசன் பால் உள்ள பற்றாலும், மடத்தின் உதவியாலும், அர்ச்சகர் கோவிலுக்கான பூஜைகள் நடத்தி கொண்டு இருக்கிறார் என்றார்.
அவர் சொல்வது எந்தளவு உண்மை என்று தெரியா விட்டாலும், கோவிலின் விரிசல்களின் நிலைமையை வைத்து அவர் சொல்வது உண்மையாக தான் இருக்க கூடும் என்று என்ன தோன்றுகிறது.
விசேச தினங்கள் மட்டும் கோவில் கூட்டம் அதிகம் வரும் போல தெரிகிறது. அவருக்கு சிறிதளவு பணம் கொடுத்து அவரின் பணிக்கு நன்றி சொல்லி விட்டு , வெளியே வந்தால் நம்பி வாழ்ந்த இடம் என்று ஒரு அலங்கோலமான இடத்தை காட்டுகிறார்கள். நம்பியின் உருவசிலை மட்டும் இங்கே நிற்கிறது. கோவிலின் நிலைமை கண்டு நம்பி திகைத்து போய் கற்சிலையாக நிற்பதாக பட்டது எனக்கு.
"நன்றி நம்பியே, நீங்கள் இல்லாமல், ஈசனை கொண்டாடும் தேவாரம் இல்லை, உங்களை கொண்டாட எங்கள் மக்களுக்கு தெரியவில்லை , மன்னித்து கொள்ளுங்கள்" , என்று அடி பணிந்து விடு அடுத்த கோவில் நோக்கி கிளம்பினேன்.
அரசாங்கம் இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் ஆலயங்களை அழித்து கொண்டு இருக்கிறது. ராஜராஜ சோழன்,மிக பெரிய தமிழ் பேரரசுவை நிறுவியவன். அவன் இந்த கோவிலுக்கு . நம்பியுடன் வந்ததாக, கோவில் குறிப்புக்கள் சொல்கின்றன. எவ்வளவு பெரிய வராலற்று உண்மை. இந்த கோவில் தமிழ் மக்களின் வராலற்று பொக்கிஷம் அல்லவா. தமிழ் மன்னனின் இருப்பை உறுதி செய்யும் கல்வெட்டு அல்லவா?
கோவில் நிலங்களை மீட்டு, விற்பனை செய்து, அதை வங்கிகளில் போட்டு , வட்டியை வைத்தே கோவிலை சிறப்பாக கவனிக்கலாம் அல்லவா. ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை?
தேவாரத்தை எடுத்து தந்தவரின் இடம் தெருவில் நிற்பதா , அவர் வாழ்ந்த இடம் வீழ்ச்சியில் இருப்பதா. சிந்திப்பீர் மக்களே.



இந்த அக்ரமஙகளுக்கு விடிவு பிறக்குமா?
ReplyDelete