என்ன சொல்லி அழைப்பது ஈசனை . பித்தனா அல்லது என் அப்பனா என்று தெரியவில்லை. சிறு வயதில் இருந்து சிறு காயம் பட்டாலும் அம்மா என்று விம்மி விளித்தல் விலகி போய், ஈசனே என்று அலறிய அழுகுரலாக அது மாறி போனது. ஈசனை இஷ்ட தெய்வமாக ஏற்றால் கஷ்டம் மட்டுமே அவனின் கருணையாக உனக்கு வரும் என்று சொன்னவர் பல உண்டு.ஆனால் அவனே எனக்கு எப்போதும் இஷ்டமாக இருப்பதால் இன்னல்களிலும் ஒரு இன்பம் கண்டதுண்டு. வாழ்க்கை ஒரு நிரந்தமற்ற நிர்ணயத்தை நோக்கி நகர்கையில் ஈசனை பற்றிய நம்பிக்கையே அடுத்த நொடிகளை நடத்தி கொண்டு போய் உள்ளன. இதயத்தை இரு கூறாக பிளந்த வேதனைகளிலும், முதுகிலே வேலாக பாய்ந்த துரோகத்திலும் , மருந்தாக அவன் ஒரு போதும் வந்தது இல்லை, மாறாக தோழனாகவே வந்து உள்ளான். எந்த மந்திரமும் நினைவில் நின்றது இல்லை .அவன் பெயரை சொல்வதும் அவனை எப்போதும் நினைத்தலே நிறைவாக இருக்கிறது.
எல்லா ஈசனின் அடியார்களை போலும், எனக்கும் சிவராத்திரி அன்று எப்படியாவது சிவலோகம் போக வேண்டும் என்ற வேட்கை உண்டு. ஆனால் பிறப்பு அறுக்கும் எம்மானிடம், பிணைப்பு அறுத்தல் பற்றி யாசிக்கும் முன், பிள்ளை வந்து நாவில் நிற்கிறது. தரணியில் இருக்கும் எல்லா தந்தைகளுக்குமான தடுமாற்றம் தான் இது. தடுமாறும் போது எல்லாம் தாங்கி பிடிக்கும் தகப்பனாக ஈசனே நிற்கின்றான். அவதாரம் எல்லாம் அவனுக்கு அவசியம் இல்லை, எப்பொழுது கேட்பின் , அப்பொழுது அந்த கணமே இறங்கி வந்து உள்ளான். பாற்கடலின் அமுதத்தை மற்ற தெய்வங்கள் ஏற்க, இவன் மட்டுமே உலகம் காக்க ஆலகால விஷத்தை ஏற்றான். முக்தி தேடும் மனிதர் எல்லாம் பற்றி கொள்வது மஹா தேவரை தான். இச்சைகளை இழக்க துடிக்கும் எவரும் அடைய துடிப்பது இந்த தேவாதிதேவனை தான்.
பொருள் வேண்டுவர் இவர் பின் போவதும் இல்லை, அருள் வேண்டுபவரும் இவரை அணுகுவதும் இல்லை.
இவரை தேடி போவர்கள், தேடுவதும் , வேண்டுவதும், இவரை தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஹர ஹர மகாதேவா !!
No comments:
Post a Comment