சந்தேகமே இல்லாமல் 2016 வருடம் நிறைய விசயங்களை கற்று தந்தது. நிறைய விசயம் ஞானம் உள்ள முக நூல் தோழர்களையும், தோழிகளையும் அறிமுகம் செய்து வைத்தது. இங்கே எல்லாரும் நண்பர்கள், “நெருங்கிய, உயிர்” நண்பர்கள் யாரும் இல்லை என்று தெளிவு செய்து கொண்டேன்
புத்தகம் படிப்பது என்ற நிலையில் இருந்து புத்தகம் எழுதுவது என்ற நிலைக்கு என்னை எடுத்து சென்றது. எழுதும் விசயத்திற்காக மேலும் பல புத்தகத்தை படிக்க வைத்தது. தாய் தேசத்தின் வரலாறுகளை படிப்பதற்கும். மொழி பெயர்ப்பதற்கும் இந்த ஆயுள் போதாது என்று திகைக்க வைத்தது.
தனிப்பட்ட வாழ்க்கை வழக்கம் போல் ஏற்ற இறக்கம் கண்டே நகர்ந்தது. பிள்ளை பேசுவது என்ன வென்று புரியாமல் அவன் என்ன செய்து கொண்டு இருக்கின்றான் என்பதை பார்ப்பதே பரவசமாக இருந்தது. மழலை பேச்சு மயக்கி போட்டது. தாய் தேசம், பெற்றவர்கள், மனைவி, பிள்ளைக்கு பிறகு தான் எதுவும் என் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற முடியும் என்பது புரிந்தது.
என் தொழிற்முறை வாழ்க்கையில் 2016 தான் இருப்பதில் மிக மோசமான வருடம். சில விசயங்கள் கற்று கொண்டேன். நேரிடையாக பேசவே கூடாது , மின்னஞ்சல்(EMAIL) மூலம் தான் பேச வேண்டும் என்று கற்று கொண்டேன். நேரிடையாக விவாதம் செய்தால், மிக சுலபமாக அது வேறு அர்த்தத்தில் நமக்கு எதிராக திருப்பபடும். சொன்ன விஷயத்தை சொல்லவே இல்லை என்று மறுக்கும் அபாயமும் நீங்கியது.
ஒருத்தர் திரும்ப திரும்ப ஒரே விசயத்தில் தவறு செய்து கொண்டு இருந்தாலோ அல்லது நம் தொழிற்முறை கேள்விகளுக்கு பதில் அளிக்க வில்லை என்றாலோ , அது ஒரு முறை என்றாலும், ஏழு முறை என்றாலும், அவர்களின் தவறுகளாலும், பதில் அளிக்க மிக மிக தாமதம் செய்வதாலும் நமக்கு ஏற்படும் கூடுதல் வேலை பளுவை பொறுத்து கொண்டு, அவர்களுக்கு நாம் திரும்ப திரும்ப “பொறுமையாக” சுட்டி காட்ட அல்லது நினைவூட்ட வேண்டும். அப்போது தான் நன் மதிப்பை பெற முடியும். இத்தனை வருட தொழிற்முறை வாழ்க்கையில் புதிய கற்றல் இது.
தாய் தேசத்தை பொறுத்தவரை எனக்கு சந்தோசமான வருடம். தன் பிள்ளைகளை கொல்பவனை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்த தேசம், கட்டுப்பாடு கோடுகளை அறுத்து கொண்டு போய், பகைவனை பழி தீர்த்தது. விண்வெளியில் விளையாட்டு காட்டி உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. பொருளாதார வளர்ச்சிக்காக , துணிச்சலாக தன்னை மாற்றத்தில் ஆழ்த்தியது.
2016 ல் கற்றலிலும், கஷ்டத்திலும் காத்து நின்ற இறைக்கு நன்றி.
2017 ல் இறையின் கை பிடித்து கற்க காத்து இருக்கின்றேன் .
உறவுக்கும் , நட்புக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment