Saturday, January 23, 2016

கோழைகள் உடனான யுத்தத்தில் பாரதம் தோற்று கொண்டு இருக்கிறது...

முற்று பெறப் போவதில்லை இத்தகைய முற்றுகை. இதற்கு முற்று புள்ளி வைக்க எவரும் இங்கே முயல போவதும் இல்லை. நான்கு நாட்களாக சண்டை நடக்கிறது ஆறு தீவிரவாதிகளை பிடிக்க. வல்லரசுகளின் வரிசையில் இடம் பிடிக்க மல்லு கட்டும் நம் தேசத்திற்கு இது மகத்தான பின்னடைவு. தொடர்ந்து தொல்லைகளை பெறும் தேசம் அதை எதிர் கொள்ள தனக்கான வலுவை இந்நேரம் பெற்று இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அதற்கான துணிவும் தெளிவும் இல்லை.

ஒவ்வொரு முறையும் தாய் நாட்டை காக்கும் போராட்டத்தில் , அவளின் மகன்கள் தங்கள் உயிர்களை உதிர்க்கிறார்கள். வீட்டை காக்க பிறந்த பிள்ளைகளை நாட்டை காக்க அனுப்பியவர்கள் , அதற்கு பரிசாக அவர்களின் பிள்ளைகளை பிணமாக்கி சவ பெட்டியில் சர்வ மரியாதையுடன் அனுப்பி கொண்டு இருக்கின்றோம். இந்த தாய் தேசம் ஒவ்வொரு நாளும் விழிக்கும்போது, அதன் வீர பிள்ளைகளில் யாரவது ஒருவர் மீளா துயிலில் போகிறார். வல்லரசு பேசும் தேசம், வகுத்த இலக்கணம் இது தானா?

கார்கில் போர் கடந்த காலம் அல்ல, அது எதிர் காலத்தில் நடக்க போவதை சொல்லும் கதை. மோடியை நாவஸ் ஷெரிப் கட்டி தழுவிய போதே , எல்லாருக்கும் இங்கே தெரியும், இவர்கள் முதுகில் குத்த போகிறார்கள் என்று. இது உயர் அதிகாரர்களின் அலட்சியம் மட்டும் அல்ல, பாதுகாப்பு படைகளை நவீனபடுத்துதலை தாமதபடுத்தியால் தான் நமது இராணுவ வீரர்களை இழந்து கொண்டு இருக்கின்றோம்.

கட்டிடத்திலும் , காடுகளிலும் ஊடுருவி பார்க்கும் உளவு செயற் கோள்களை இந்த தேசம் இதுவரை பெற்று இருக்க வில்லை. புல்லட் ப்ரூப் கவசம் மார்பிற்கு மட்டும் என்று இன்னும் நாம் வைத்து கொண்டு இருக்கின்றோம். தீவிரவாதிகள் குறி பார்த்து முகத்திலும் கழுத்திலும் சுடுகிறார்கள். தலை கவசம் முக கவசம் இன்றி பாது காப்பு படைகள் பலவீனமாகி, நிற்கின்றன.

இந்த தேசத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. கொஞ்ச நாட்கள் கெடுபிடி செய்தார்கள். அப்புறம் அப்படியே விட்டு விட்டார்கள் கண் துடைப்புக்கு சோதனை செய்கிறார்கள் என்பதை கண் கூடாக பல முறை பார்த்து இருக்கின்றேன். யார் வேண்டும் என்றாலும் ரயில் நிலையத்தில் சுலபமாக எல்லா வழியிலும் நுழையலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையமும் பாதுகாப்பு அற்று தான் உள்ளது. யாரை போய் குற்றம் சொல்வது என்று தெரிய வில்லை.

எனது நண்பர் ஒருமுறை சொன்னார், எந்த திருவிழா நாட்களிலும் எந்த பொது போக்குவரத்தையும் உபயோக படுத்த முயலாதே , ஏன் எனில் தீவிரவாதிகளின் முதல் முற்றுகை பொது போக்குவரத்து தான். கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள். இந்த தேசத்தில் எந்த இடமும் பாதுகாப்பு இல்லை. நமக்கு பாதுகாப்பு அளிக்கும் வல்லமையை இந்த தேசத்தை ஆட்சி செய்தவர்களும் நடப்பு ஆட்சியாளர்களும் பெற வில்லை என்பதே உண்மை. பாதுகாப்பு படைகளே தொடர்ந்து பாதுகாப்பு இன்றி வீர மரணத்தை தழுவி கொண்டு இருக்கின்றன.

நேரிடையான யுத்தத்தில் நிலையான வெற்றியை பெற்ற நம் தாய் தேசம், கோழைகள் உடனான யுத்தத்தில் தோற்று கொண்டு இருக்கிறது...

http://tamil.oneindia.com/news/india/pathankot-attack-5-terrorists-killed-operation-still-on-says-nsg-243774.html

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...