Sunday, January 21, 2018

திருவண்ணாமலை கோவில்

காலையில் நண்பர் ஒருவர் திருவண்ணாமலை கோவில் தேர் பவனி வீடியோவை அனுப்பி இருந்தார். நல்ல கூட்டம் , ஒரு நண்பரும் பார்த்து கொண்டு இருந்தார் , என்ன இவ்வளவு கூட்டம் இந்த பாட்டிகள் எல்லாம் விழுந்தால் என்ன செய்வது, வீட்டில் இருந்த படியே பார்த்து இருக்கலாம் அல்லவா என்றார் சலிப்பாக. இதே கேள்வியை அதே திருவண்ணாமலை தேர் திருவிழாவில் நானே நெற்றி நிறைய திருநீறு அணிந்து இருந்த பாட்டியிடம் கேட்டு பல வருடத்திற்கு முன் கேட்டு இருக்கின்றேன். என் பாட்டி கஷ்டப்பட்டு கொள்கீறிர்கள், வடம் பிடித்து இழுக்க உங்களால் முடியாமா, விழுந்தால் என்ன ஆவது, விலகி கொள்ளுங்கள் என்றேன்.
ஐயா, இது வடம் அல்ல, அது ஈசனின் கை, என் வாழ்நாள் முழவதும் என்னை கை பிடித்து அழைத்து போய் இருக்கின்றான், அவரை தவிர வேறு யாரும் எனக்கு நினைவு இல்லை. இன்று ஒரு நாள், ஈசனின் கை பிடித்து நான் அழைத்து போகின்றேன், முடியாமல் போனால், அவனே என்னை அழைத்து கொண்டு போகட்டும் என்றார். அப்போது ரெண்டு கெட்டான் வயது. கூட்டமாக என் வயது ஒத்த மங்கைகள் கடந்து போனால், மதி மயங்கும் வயது. என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. சிறிது தூரம் கடந்தவுடன் ,தேரின் மேல் இருந்தவர் சிலர், சில மாலைகளை கழற்றி வீசி எறிந்தார்கள், என்னை தாண்டி தேர் வடம் பிடித்து கொண்டு இருந்த அந்த பாட்டியின் தோளில் ஒரு மாலை வந்து விழுந்தது. அது தற்செயலாக கூட இருக்கலாம்,
ஆனால் பாட்டி சர்வேசா சர்வேசா என்று கை கூப்பி அழுதது. இறை திரும்பி பார்த்து இருக்கிறது என்று தான் உணர்ந்தேன். அது கயிறு என்று அந்த பாட்டி கருத வில்லை, அது அந்த கயிலை நாதனின் பொற்கைகள் என்று உணர்வுப்பூர்வமாக உருகி நிற்கிறார், ஒரு கயிறு அந்த பாட்டியை கடவுளடன் சுலபமாக இணைக்கிறது. தேர் ஏறி வருவது தெய்வம் என்று எனக்கு தெரியும், நானும் கையில் வடத்தை பிடித்து இருந்தேன், எதிர் திசையில் நின்ற கன்னியரை பார்த்து சிரித்ததும் அவர்கள் என்னை பார்த்து சிரித்ததும், அதையும் தாண்டி தெரிந்த உணவகத்தில் புரட்டோ சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும், தங்கும் விடுதியில் விட்டு வந்த பைக்கில் யாரும் பெட்ரோல் எடுத்து இருக்க கூடாது என்ற எண்ணம் தான்மாறி மாறி வந்தது.
என்னால் ஏன் பாட்டி மாதிரி யோசிக்க முடிய வில்லை என்று தோன்றியது. பாட்டி வயது இருந்தால் நான் யோசித்து இருப்பானோ என்ற சிந்தனை வந்தது. ஆனால் சிறு பிள்ளைகள், தன் சித்தத்தில் , சிவனை சிறைபிடித்து ஆளுடைய பிள்ளை என்று நாயன்மாரரக நிமிர்ந்து நின்ற வரலாறு படித்தது உண்டு. வயது என்பது விஷயம் அல்ல, உள்ளத்தில் யாரை வைக்க வேண்டும் என்பதில் தான் விவரம் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
பாட்டி நகர்ந்து போனது, அவர்கள் என்னை விட்டு நபரும் முன்பு, அவர்கள் காலை தொட்டு வணங்கி கொண்டேன், எதுவும் சொல்லாமல் அதற்கு கிடைத்த மாலையை எனக்கு கொடுத்து விட்டு போனார்கள். பைக்கில் திண்டிவனம் வரும் வரை அழுகை வந்து கொண்டு இருந்தது. 2௦14 வரை அந்த மாலையை பத்திரமாக வைத்து இருந்தேன். இடைப்பட்ட காலங்களில் மீண்டும் திருவண்ணாமலை போய் இருக்கின்றேன், அந்த பாட்டியை சந்திக்க சந்தர்பம் கிடைக்க வில்லை. ஒரு வேலை அடுத்த தேர் விழாவிற்கு போய் இருந்தால் சந்தித்து இருக்கலாமே என்னவோ. ஈசனே அறிவான்

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...