Tuesday, October 14, 2014

ஈசன் என் இஷ்ட தெய்வம்

ஈசன். என் இஷ்ட தெய்வம். பிறழும் மனதை, பிடித்து வைக்கும் பசுபதி நாதன். எப்படி என் இஷ்ட தெய்வமாய் என்னுள் உறைந்து நின்றது என்ற கேள்விக்கான பதில், ஆதியும் அந்தமும் அற்ற அந்த ஆடல் அழகனின் பிறப்பின் மர்மம் போல, என்னுளும் பதிலற்று தவிக்கிறது. ஈசன் உறையும் கோவிலாய் அலைந்து திரிந்த நாட்களும், கோவிலுக்குள் கட்டுப்பட்டு அமர்ந்த மனம், எங்கே கோவில் வாசற்படியை தாண்டியதும் குரங்காய் தாவி விடும் என்று பயந்து, நடை சாத்தும் நேரம் வரை , அந்த நடராஜ பெருமானை பற்றிக் கொண்டு இருந்ததும், மழையாய் மனதுக்குள் எப்பொழுதும் பெய்கிறது.
என் முட்டாள் தனத்தால் நான் செய்த தவறுகளை, ஈசனது பொறுப்பாக்கி, என்னை காக்க மறந்ததாக , ஈசனை மறந்து , இறைவனை இகழ்ந்து திரிந்த காலம் உண்டு. குழந்தை கொள்ளிக்கட்டை கொண்டு எறிந்தாலும், குற்றமற்று வாரி அணைக்கும் தாய் போல், குறைகள் நிறைந்த என்னை, நிறைபடுத்த நினைத்தவன். மாணிக்கவாசகர் ஏன் சிறு பிள்ளை போல் , ஈசனிடம், அழுது அழுது அன்பை பெற்றார் என்று இப்பொழுது புரிகிறது. நாயன்மார்களின் வரலாறை அறிந்த போது, உறைந்து போனேன்.
கண்ணபன்னார் கண்ணுக்கு கண் , ஈசனுக்கு அளித்த கதையையும், மகனை அரிந்து அமுதூட்டிய நாயன்மார் கதையும், படித்து விட்டு தூக்கமற்று தொலைந்து போன இரவுகள் பல உண்டு. 

இறைவன் ரகுகுல ராமனாகவும் ,மாயக்கண்ணனாகவும் தோன்றி மயங்க செய்தாலும், ஈசன் என்ற பெயரே என்னை அவன் பால் இழுக்கிறது. ஈசா என்ற சொல்லே உள்ளம் எங்கும் உறைகிறது. எனக்கு இறைவனாக விளங்கும் என் தாய் தந்தைக்கும் அவனே இறைவன்.
எங்கும் நிறையும் ஈசனை , என்னுள்ளும் நிலை நிறுத்த முயலும் முயற்சி இன்னும் தொடர்கிறது. எழுதிய வார்த்தைகள் போதும், என்று எண்ணிய போது, எழுதாமல் விட்ட வார்த்தைகளே எங்கும் நிறைகின்றன. அடி முடி காண முடியாதவனை, வார்த்தைகள் கொண்டு அடைக்க முடியமால் , என் தமிழ் கூட மெதுவாக தளர்கிறது. வார்த்தைகள் விடைபெற்று கொள்ள, ஈசனின் நினைவே இதயத்தை நனைக்கிறது.
தொலை தூர , இருசக்கர வாகன பயணங்களில், ஈசனை இசையாய் பருகியதும், ஆள் அரவமற்ற சாலைகளில் இறைவனின் திருநாமத்தை உரைத்ததும், மனம் மயங்கி வாகனத்துடன் விழுந்ததும், எழுந்த நிற்க யாராவது துணை வருவார்களோ என்று தலை தூக்கி பார்த்த போது, ஈசனின் கோவில் தென்பட்டதும் ஒரு போதும் என் ஈசன் என்னை கை விட மாட்டன் என்று எண்ணி அழுததும், தரிசனம் கிடைத்து வெளியே வந்த போது, அழகு தாவணிகள் அணிவகுப்பில் தன்னிலை தடுமாறி , இறைவனை மறந்ததும், மறந்த செயலை நினைத்து மனம் மருகியதும், என் சிவனே என்று சொல்லி அரற்றியதும், எப்பொழுதும் கட்டுபாடற்ற மனக்குதிரையை , கடிவாளம் இட்டு அமைதி படுத்த ஈசனின் பெயரை சொல்லி வருவதும் , இப்பொழுதும் தொடர்கிறது.
பிறை சூடும் பெருமான், என் பிறப்பறுக்கும் நாள் எந்நாளோ?
தென்னாடுடைய சிவனே , உன்னை வந்தடையும் நாளே , என் வாழ்வின் திருநாள்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...