நேற்றைய சிவாலயங்களின் பகுதியின் தொடர்ச்சி.
முதல் முறை வாழ்க்கையில் , முகம் அறியா மனிதர்களுடன் கோவிலின் (வெளியே) ஓர் இரவு கழிந்தது. இரவு கனவுகளிலும் , அந்த திரியம்பகனே (ஈசன்) என்னுள் திரிந்து கொண்டு இருந்தான். காவலனை கண்ட கள்வன் விலகி ஓடுவது போல, இருளும் கதிரவனை கண்டதும் , காணமல் போனது. சிவ அன்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் , பக்கத்து காட்டில், காலை கடன்களை முடித்து விட்டு, ஒரு அன்பரின் தோட்டத்தில் பம்பு செட்டில் ஆனந்த குளியலை நடத்தி விட்டு, மீண்டும் சிவ தரிசனம் பெற்று விட்டு, காஞ்சிபுரம் நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்.
காம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில்- காஞ்சிபுரம், விடுமுறை தினம் எனபதால் நல்ல கூட்டம். பணம் கொடுக்க அர்ச்சகர்கள் வேண்டுகிறார்கள். இது வேதனையான விஷயம். சுந்தரர்க்கு கண்ணை பறித்த ஈசன், இத்தலத்தில் மீண்டும் இடக்கண் கொடுத்த தலம்."உள்ளே இருக்கும் என் அககண்கள் திறக்காதா , முடிவில்லா கண்களை கண்ட முக்கண்ணனே, உன்னின் ஒரு சிறு பார்வை என் மேல் விழுவாதா" என்ற விசும்பல் என்னுளும் எழுந்தது.
பல வெளிநாட்டவர்கள், கோவிலின் அமைப்பை வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் என்னிடம் கேட்டார், ஏன் கோவில் மட்டும் நிற்கிறது, ஆனால் எந்த அரசரின் கோட்டைகளையும் காண வில்லை. பதில் இதுதான், "மனிதர்கள் பிறப்பார்கள் , வாழ்வார்கள், மண்ணோடு மக்கி மறைந்து போவர்கள்,அரசர்களும் சேர்த்துதான்.அதனால் எங்கள் அரசர்கள் மண் கோட்டையில் வாழ்ந்தார்கள். அவர்கள் மண்ணுக்குள் போக, மண் கோட்டையும் மறைந்தது. ஆனால் கடவுள் கல்லை போன்றவன். எக்காலத்திலும் அழியாது. அதன் ஆயுள் முடிவற்றது. ஆகவே எங்கள் இறைவன் களுக்கு நாங்கள் கல்லால் கோவில் கட்டினோம்".
நாங்கள் போய் விடுவோம். எங்கள் இறை எப்போதும் இங்கும் எங்கும் இருப்பான்!! (பாலகுமாரன் ஒரு நாவலில் இந்த பதிலை சொன்னார்)
திகைத்து போய் நின்று விட்டார். மொத்த குடும்பமும் திரும்ப திரும்ப கோவிலை பார்த்து கொண்டு நின்று கொண்டு இருந்தது.அவர்களுக்கு புரிகிறது, இங்கே தொன்று தொட்டு மிக பெரிய கலாச்சாரம் ஒன்று தொடர்ந்து வருகிறது, அந்த கலாச்சரம் இறைவனை கொண்டாடி இருக்கிறது என்று.
இங்குள்ள மாற்று மதத்தவர்களை நினைத்து நொந்துக் கொண்டு வெளியே வந்தேன்.
ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்-ஓணகாந்தன்தளி- காஞ்சி. சுந்தரர்காக புளிய மரத்தின் காய்களை , பொன் காய்களாக ஈசன் மாற்றிய இடம். சிறிய கோவில். பித்தன் (ஈசன்) இங்கே பிரகாசமாய் பரிபாலிகின்றான். அர்ச்சகர் இங்கே குறி சொல்லுகிறார். அவரின் செய்கை நெருடலை ஏற்படுத்துகிறது. கருவறை முன் நின்று கொண்டு மற்றவர் தரிசனம் செய்ய முடியாமல் நடுவில் ஆடி கொண்டு இருக்கிறார். அவர் தவறு செய்கிறார். குறி சொல்வதாக இருந்தால் ,வெளிப் பிரகாரத்தில் உக்காந்து குறி சொல்லட்டும். இவரை போன்றவர்கள் ஹிந்து மதத்திற்கு இழிவை கொண்டு வருபவர்கள். கிடைத்த இடைவெளியில் ஈசனை வணங்கிவிட்டு வெளியே வந்தேன்.
திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம், திருஞானசம்பந்தர் பாடலில் உருகிய விஷ்ணு , லிங்க உருவம் பெற்ற இடம். ஈசன் தன் ரூபத்தை திருமாலுக்கு கொடுத்த இடம் இது. குடமுழுக்கு விழாவுக்கு கோவில் தயாரகி கொண்டு இருக்கிறது. லிங்கத்தை எதோ ஒரு பாணத்தால் நிரப்பி வைத்து இருக்கிறார்கள், ஆகம விதிப்படி. எதில் போட்டு வைத்தாலும், ஈசன் இயல்பாய் இயல்பழகன். என்னால் முடிந்த நிதியுதவியை செய்து விட்டு , அடுத்த கோவிலை நோக்கி தொடர்ந்தேன்.
சத்யநாதர் திருக்கோயில்-காஞ்சிபுரம், புதன் கிரக பதவி பெற்ற தலம். இந்திரன் சாபம் நீங்க பெற்ற தலம். அழகான கோவில். அன்பான அர்ச்சகர். இங்கே ஒரு தெய்விக அமைதி நிலவுகிறது. ஏன் என்று புரியவில்லை. எழுத்தறிநாதன் (ஈசன்), ஏகாந்தமாய் அம்மையுடன் உள்ளான். அடுத்த கோவில் செல்லாமல் இங்கே நின்று விடலாம் என்ற அளவில் ஈசன் இங்கு ஈர்க்கின்றான். இருந்தும் இறை எங்கே எல்லாம் இறங்கியதோ அங்கே போய் பார்க்க வேண்டும் என்ற ஆவலை கட்டுபடுத்த முடியாமல் அடுத்த தலத்திற்கு ஆயுத்தம் செய்தேன்.
இரவு நெருங்கியது, தொடர்ந்து கைலாசநாதர், கச்சஈஸ்வரர்.அனும்ன்தேஸ்வரர் என்று மற்ற பாடல் பெறாத தலங்களையும் தரிசனம் செய்தேன்.
இரவு காஞ்சியில் தங்க முடிவு செய்ததால், கடைசி தலமாக காஞ்சி அம்மனை தரிசிக்க சென்றேன். அம்மன் அற்புதமாக இருக்கிறாள். என் ஐயனின்(ஈசனின்) திருமதி அல்லவா. அழகுக்கும் அருளுக்கும் என்ன குறை தாயாருக்கு. இவள் நெற்றி குங்குமும் அல்லவா ஈசனின் சக்திக்கு காரணம். ஆனால் இந்த ஒரு கோவில் போதும், ஹிந்து மக்களை வேறு திசை நோக்கி தள்ள. பணம் கொடுத்தால் அம்பாள் முன் அமரலாம், இல்லை நீங்கள் வெளியே நின்று பார்த்து விட்டு போக வேண்டியது தான்.
இந்த கோவிலின் ஆளுநர்கள் பட்டும் திருந்த வில்லை. என் அம்மை இப்படி செய் என்று சொல்லவில்லை. இவர்கள் என் ஈசனின் பாகம் உடையவுளுக்கு இழுக்கை ஏற்படுத்துகின்றனர். உன்னை எல்லாரும் சரிசமமாக வழி பட வழி ஏற்படுத்து என் அன்னையே என்று வேண்டி கொண்டு வெளியே வந்தேன்.
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கூட்டம் அதிகம் இருந்ததால், ஒரு பெரியவர் சத்யநாதர் திருக்கோயில் போங்கள், அங்கே வெளியே நிறைய பேர் படுத்து இருப்பர்கள் என்றார்.
மீண்டும் ஒரு இரவு பொழுது ஈசனின் கோவில் வெளியே!! உற்சாகமாக கிளம்பினேன்.
நாளை மிச்சத்தையும் எழுதி முடித்து விடுகின்றேன்.
No comments:
Post a Comment