Thursday, October 9, 2014

சென்னையில் உள்ள சில சிவன் கோவில்கள்

பாவங்களின் பளு அதிகரித்து, பாதங்கள் பிரளும் போது, பாதைகள் பரமனை நோக்கித்தான் நகருகின்றன. நேற்று சென்னையில் உள்ள சில சிவாலயங்களை தரிசிக்கலாம் என்று காலை ஆறு மணி அளவில் திருவான்மியூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். காதிலோ ஈசன் புகழ் சொல்லும் பாடல்களை, அலைபேசி அனுப்பிக் கொண்டு இருக்க,அற்புதமான பயணம்.
போருரின் ஏரிக்கரை ஓரமாக ஜலகண்டேஸ்வரர் அமர்ந்து இருக்கிறார். செழிப்பாக இருக்கிறார். பார்த்தவுடன் பக்தி கொள்ள செய்கிறார்.சிறு கோவில் என்றாலும் சிறப்பாய் இருக்கிறார். நாவுக்கு இனிமையாய் , பிராசதம் வழங்கப்பட, நன்றி சொல்லி விட்டு மாங்காடு அம்மனை நோக்கி நகர்ந்தேன்.
காமாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, அரைகிலோமீட்டரில் அமைதியாக அமர்ந்து இருக்கும் வெள்ளீச்வரர் (சுக்ரன் தலம்), நோக்கி நடந்தேன்.
காமாட்சி அம்மன் கோவில் கூட்டமாய் இருக்க, இங்கே ஈசன் உள் வாங்கி சிறு நந்தவனத்து நடுவே அமைதியாக நிற்கின்றார்.
புலித்தோலுடன் ஈசனை பார்க்க பார்க்க உள்ளம் தவிக்கிறது. மிக அருகே ஈசனை பார்க்க முடிகிறது. வாய் விட்டு அழ வேண்டும் என்று தோன்றுகிறது. இதயம் மெல்ல இளைப்பாற , கண்கள் கண்ணீரை சொரிகின்றன. அழுகை எனக்கு மட்டும் வருகிறதோ என்று எண்ண ,அங்கே எல்லார் கண்களிலும் கண்ணிர்!!.
பிறைசூடியுவனடிம் பிரியா விடை பெற்று, எனது இருசக்கர வாகனம் கோவூர் ஆலயம் நோக்கி பயணிக்கிறது. திருக்கோவிலுக்கு வழிகளை விசாரித்து கொண்டு வரும் போது , சட்டுன்று எல்லாம் அமைதியாகி விழிகள் விரிகின்றன. சிறு வயல்வெளிகள் அருகே சௌந்தரேச்வரர் (புதன் தலம்) வீற்று இருக்கிறார்.
சற்று பெரிய கோவில் , நிதி உதவி தேவைப்படும் கோவில் இது. ஆனால் ஈசனோ பெயர்க்கு ஏற்றபடி மிக சௌந்தரமாக சிரிக்கிறார். பிறவி பிணி அறுப்பவனை பணிந்து விட்டு, குன்றத்தூர் நாகேச்வரர் (ராகு தலம்) ஆலயம் நோக்கி சென்றேன்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த இடம் என்றாலும் இங்கே ஈசன் மிளருகிறார். சாந்தம் இங்கே சிலையாகி நிற்க, உடம்போ சிலிர்க்கிறது. உயிர் நிலையற்று அலைகிறது. என் உள்ளம் கவர்ந்தவனிடம் உருகி விட்டு , கெருகம்பாக்கம் நீலகண்டேச்வரர் (கேது தலம்) ஆலயம் தேடி புறப்பட்டேன்.
அடுக்குமாடி குடியிருப்புகளை தாண்டி , உள்ளே சற்று தள்ளி இந்த ஆலயம் உள்ளது. சிறு ஆலயம் என்றாலும், சித்தன் சிவனின் இருப்பிடம் அல்லவா. நிசப்தம் எங்கும் நிலவ , நீலகண்டர் மனம் எங்கும் மயக்குகிறரார். ஒற்றை அகல் விளக்கு ஈசனின் நெற்றி பட்டை நகல் எடுக்க, பட்டு தெறிக்கும் மின்னலாய் பக்தி உள்ளுக்குள் இறங்குகிறது. இடியாய் இறைவன் நாமம் நெஞ்சில் இரைய , மழையாய் இமை வழியாக இறைவன் வழிகின்றான்.
எந்நாட்டவர்க்கும் இறைவனை வணங்கி விட்டு, மீண்டும் போரூர் பாதையில் பயணித்து ,போரூர் ராமநாதேச்வரர் (குரு தலம்) ஆலயத்தில் குருவடியை சரணடைந்தேன்.
ரகுகுலராமனுக்கு, வழிகாட்டி குருவாக நின்றது இந்த ஆலயத்து ஈசன் .இங்கே தெய்வம் இறங்கி வந்து இருக்கிறது. இறை இறையை தழுவி இருக்கிறது.
ராமன் உத்தமன், நல்லவன், எனவே என் ஈசன் அவனுக்கு இரங்கியது
ஆனால் நான்? செய்த பாவங்கள் என் கை கட்டி , என்னை இழுத்து கொண்டு போக, இறைவனடிம் இறைஞ்சி எதை பெறுவது? தண்டனையாய் தவிர்த்து விடு என்று தட்சிணாமூர்த்தி இடம் போய் கேட்பதா?
விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டு, ஈசனின் நினைப்பை இறுகப்பற்றி கொண்டு, இரு சக்கர வாகனத்தை என் இருப்பிடம் திருவான்மியூர் நோக்கி விரட்டினேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி!! என் நாட்டவருக்கும் இறைவா போற்றி!

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...