Thursday, October 9, 2014

274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 4-வது பகுதி

274 பாடல் பெற்ற தலங்களின் 2-வது சுற்றின் 4-வது பகுதி
சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர். சிறிய கோவில். அர்ச்சகர் அழகு தமிழில் உரைக்கிறார். தனது திருமண நிச்சயத்திற்கு செல்லும் சம்பந்தர் , உச்சி பொழுது நிறைகையில், இங்கே தங்க, ஈசன் உணவு கொண்டு கொடுத்த தலம். எந்நாட்டவர்க்குமிறைவன், இங்கே கண்ணிற்கு இனியவனாய் காட்சி தருகின்றான். கோவிலுக்கு நிதி உதவி தேவை என்று அர்ச்சகர் வெளிப்படையாக வேண்டுகிறார். தவறு இல்லை அதில்.
ஆனால் வாரி கொடுக்கும் வான்மீக நாதன் (ஈசன்) கோவில் வளம் அற்று இருக்கையில் உள்ளம் வலிக்கிறது. சுற்றி வந்தால் துணை தெய்வங்கள் தளர்ந்து போய் இருக்கிறது. ஈசன் எனக்கு கொடுத்த வளத்தில் என்னால் முடிந்த ஒரு பாகம் அவனுக்கு கொடுத்து வந்தேன்.
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர், உச்சிநாதர் கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. கொள்ளிட ஆற்று பெருக்கில் கோவில் சிதைந்து போக, இவ்விடம் கோவில் அமைத்து இறைவனை பேணுகின்றனர். மண்ணில் சற்று புதைந்த நந்தி நம்மை வரவேற்கிறது. வெள்ளை நிற லிங்கம், நம்மை பார்த்து சிரிக்கிறது. அதன் பின்பு ஈசனும், தேவியும் எழுந்து அருளி உள்ளனர்.
கபில முனிவரை கொள்ளை கொண்ட கண்மலர்கொண்டான் (ஈசன்), மீது மன்னனின் குதிரை கால் பட்டு பிளவு பட்ட தடம் உள்ளது. பிளந்து போனலும், பிறவி அறுப்பவனின் , பலம் குறையமா என்ன. இங்கும் அர்ச்சகர் கோவிலுக்கு நிதி வேண்டுகிறார். பராமரிப்பு என்ற வார்த்தை இந்த பக்கம் கூட எட்டி பார்க்க வில்லை போலும். கோவில் சுற்றி பார்க்கையில் அர்ச்சகர் முடிந்தளவு முயற்சி செய்து ,கோவிலை சரியாக வைக்க முயல்கிறார். நானும் முடிந்தவரை தென்பட்ட குப்பைகளை சுத்தம் செய்தேன். இயன்ற பண உதவி செய்து விட்டு அடுத்த கோவில் நோக்கி சென்றேன்.
'திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில் எனது பயண திட்டப்படி பார்க்க வேண்டிய கோவில். ஆனால், காரைக்காலில் உள்ள கோவிலை தவறாக புதுசேரி என்று குறிப்பிட்டு வைத்து கொண்டதால், கோவில் தேடி தலைச்சங்காடுதல பகுதி முழுதும் அலைந்தேன். என் பயண திட்டத்தில் இல்லாத பாடல் பெற்ற தலமான தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் கண்டேன். கோவில் திறந்து இருந்தது. ஒருவரும் இல்லை. மத்திம அளவு உடைய கோவில். ஒரளவு நல்ல நிலையில் உள்ளது. கருவறை சற்று இருட்டறையாக இருந்தால், சற்று பயமாக இருந்தது. சிறிய அகல் விளக்கு மட்டும் ஈசனின் இருப்பை சொன்னது. கறுத்தமணிகண்டர் (ஈசன்) நமக்கு வரும் கலவரத்தை கண்டு கள்ளத்தனமாய் சிரிக்கிறார். பிரகாரம் சுற்றி வந்தால், கால் எல்லாம் நடுங்குகிறது.
அசாதாரணமான அமைதி அச்சத்தை தருகிறது. மீண்டும் ஈசன் முன் வந்து நின்றால், கண்கள் இருளுக்குள் கலந்து அங்கே ஈசன் மட்டும் ஒளிர்கின்றான். பயம் மெல்ல விலகி, இறையின் பெயர் சொல்லி அழைக்க , அதுவரை அருகே இருந்த அச்சம் அணைந்து போனது. திருமால் வழிபட்டு சங்கை ஆயதமாக பெற்ற தலம் என்று குறிப்பு உள்ளது. தியானத்தில் இருக்கும் ஈசனின், தனிமை தவம் கலைக்க விரும்பமால், விடை பெற்றேன்.
திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இந்த கோவில் செல்லும்போது மதியம் 2.00 மணி. கோவில் சாத்தப்பட்டு இருந்ததால் , அருகே இருந்த அஞ்சுநேயர் கோவிலில் சிறிது ஓய்வு எடுத்தேன். நடை திறந்ததும், முகம் , கால் கழுவி உள்ளே சென்றேன். கோவிலின் தலபுராணம் மீண்டும் அர்ஜுனன் பாசுபதம் பெற்ற வரலாறை சொல்ல குழப்பம். திருவேட்களம் கோவிலும் அதே வரலாறை சொல்கிறது.
ஆனால் சின்ன திருத்தம், இங்கே அம்பாள், அர்ஜுனன் ஆயுதம் பெற தகுதியானவனா என்ற விவாதம் செய்த கதை வருகிறது, ஆனால் ஈசனை வில்லால அடித்த நிகழ்வு வராத காரணத்தினால், ஒரு நிகழ்வின் தொடர் நிகழ்வாக நாம் உருவகபடுத்தினால், நம்மால் இந்த கோவிலின் வரலாறை புரிந்து கொள்ள முடியும். கோவில் தெம்பாய் இருக்கிறது. ஈசன் இங்கே சதுர வடிவ ஆவுடையப்பன் மேல் உள்ளார். சலஞ்சடையான் (ஈசன்) நன்றாக கோவிலில் சஞ்சராம் செய்கின்றான். நற்றுணைநாதன் (ஈசன்) நலம் சொல்லி விசாரிக்க, நமக்கோ அவன் நாமம் சொல்லி நல்வழிப்படுத்த மனம் வேண்டுகிறது.
உலகம் இயங்குகிறதோ இல்லையோ , நமது உள்ளம் ஈசனின் துணையின்றி இயங்காது என்று உள்ளே உறைக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் கோவில் அழகை , அதன் சிறப்பை சிதைகிறார்கள் என்று மணியக்காரர் வருத்தப்பட்டார். எந்த அமைப்பு இன்றி கல் தூண்கள் நந்தி அமைந்த இடம் மேல் ஆயிரம் வருடமாய் நிற்க, அதன் மேல் டைல்ஸ் அடித்து அதன் சிறப்பை மறைத்து விட்டார்கள் என்று காட்டினார். என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கோவில் சுற்றி வந்து விடை பெற்றேன்.
தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், மற்றும் திருதேளிசெர் கோவில் செல்லும் வழி யாருக்கும் தெரியாமல் தடுமாற, நற்றுணையாவது நமச்சிவாயமே என்ற எண்ணி, ஈசனிடம் மனதில் மன்றாட , ஈசன் மனம் இரங்கினான்.







No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...