உண்மை, முன்னுரை எழுதிய இறை, நமக்கான முடிவுரையும் எழுதும். வார்த்தைகளுக்குள் சிக்கி வதைபடும் வாழ்க்கையானது விதி. விதியை வெல்லும் வழி மதியாம். மதியே மயங்கி சரிந்து அந்த முக்கண்ணன் முன் மண்டி இட்டு விட்டது. மனதை சட்டென்று ஒரு நாள் ஈசன் பிடித்து இழுத்து போது தான் தெரிந்தது , உள்ளத்தில் வேறு யாரோ உறைந்து கொண்டு இருந்தார்கள் என்று. உதறி தள்ள முயன்று போது தான் உண்மை உறைத்தது. உதிரம் எங்கும் உலவுவது அவனே .
நெடுந்தூர பயணத்தில் அவனே வழிகாட்டி. பயணத்தின் ஒரு பகுதியாக, பூமி வழியாக நம்மை கூட்டி கொண்டு போகின்றான். தாய் தந்தை, உடன் பிறந்தவர், மனைவி, பிள்ளை எல்லாம் பூமியில் நமது சக பயணி , நாமும் அவர்களுக்கு அப்படி தான். பூமியை தாண்டி தொடர்ந்து போகும் தொலைதூர பயணம் உள்ளது, அது முடிவற்றது. ஆக மதி சரிந்தது சதி அல்ல, அதுவே விதி. அடடே பூமி பிடித்து இருக்கிறதே என்று புத்தி யோசித்த போது, ஈசன் நம் இதயத்தை பிளந்தான். இருப்பை காட்டினான். யாத்திரை இன்னும் இருக்கிறது என்று சுட்டி காட்டினான். பற்று அற்ற அந்த பெருமகன் நம்மை பற்றிக் கொண்டான், பயணத்தின் முதலும் அவனே, முடிவும் அவனே, பாதையும் அவனே, பாதுகாவலனும் அவனே.

No comments:
Post a Comment